Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜா ரவிவர்மா ஓவியங்கள் மாயம்: கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

  உலகப்புகழ் பெற்ற ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் காணாமல் போனது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசின் நிலையைத் தெளிவுபடுத்துமாறு, கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ராஜா ரவிவர்மாவின் கொள்ளுப் பேத்தியும் வழக்கறிஞருமான அர்ச்சனா நாராயணன், இது தொடர்பாக, கேரள உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

 கிளிமானூர் அரண்மனை ஆவணங்களின்படி, ராஜா ரவிவர்மா வரைந்த 75க்கு மேற்பட்ட ஓவியங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால், அருங்காட்சியக இயக்குநரகத்தால் நிர்வகிக்கப்படும் திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா ஆர்ட் காலரியில் 55 ஓவியங்கள் மட்டுமே காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

 ரவிவர்மாவின் பிரபல ஓவியங்கள் சில, தொல்லியல் துறையின் அனுமதியின்றி தனியார் கலைக்கூடங்களால் ஏலவிற்பனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ரவிவர்மாவின் உறவினர் அளித்த புகாரை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அந்த விசாரணை அறிக்கை தெளிவற்றதாகவும், முரண்பாடுகள் கொண்டதாகவும் உள்ளது. எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

 இந்திய பாரம்பரியக் கலைச்செல்வங்கள் வெளிநாடுகளில் ஏலத்தில் விற்கப்படுகின்றன. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க, ரவிவர்மாவின் கடத்தப்பட்ட ஓவியங்களை பறிமுதல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

 இவ்வாறு அர்ச்சனா நாராயணன் தனது மனுவில் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி குரியன் ஜோஸப், நீதிபதி பி.ஆர்.ராமன் அடங்கிய கூடுதல் பெஞ்ச், “இவ்வழக்கில் மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

Exit mobile version