Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபட்சவை போர்க்குற்றவாளி – தடையாக இருப்பவர்கள் யார்? – ஆர். நல்லகண்ணு.

கருத்துரிமை களம் என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு பேசியதாவது- திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள், செம்மொழி மாநாட்டை பற்றி கருத்து தெரிவிப்பவர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தா. பாண்டியன் கார் எரிப்பு, பாரதிராஜா அலுவலகம் நொறுக்கப்பட்டது, பழ. கருப்பையாவும் அவரது வீடும் தாக்கப்பட்டது ஆகியவை இதற்கு உதாரணங்கள். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வீட்டில் கல்லெறிந்தவர்களை கண்டறிந்து போலீஸôர் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், பழ. கருப்பையாவை தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதுபோல தமிழகத்தில் நிர்வாகம் சீர்குலைந்துள்ளது. நேர்மையான ஒரு ..எஸ். அதிகாரி பழிவாங்கப்படுகிறார். பணியில் சேர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை கிறிஸ்தவர் என்று சொல்லி பிரச்னை ஏற்படுத்துகிறார்கள். ஜனநாயகம் உயர்த்தி பிடிக்கப்படுகின்ற 21-ம் நூற்றாண்டில் உலகில் எங்கும் நடப்பதை காட்சிகளாக பார்க்கும் வாய்ப்பை பெற்றுள்ள நவீன உலகில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்ச சுதந்திரமாக நடமாடுகிறார். ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிப்பதில் தடையாக இருப்பவர்கள் யார்? இந்த உண்மையை நாம் அம்பலப்படுத்த வேண்டும். இதுவரை 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் நாகை மீனவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனாலும் இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் நல்லகண்ணு. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Exit mobile version