அறிக்கை:
வரலாற்றில் சில சம்பவங்கள் விசித்திரமாக திரும்பத் திரும்ப நடைபெறுவதால்தான் வரலாறு மீண்டும் திரும்புகிறது என்ற சொற்றொடர் உலவுகிறது.
இதேபோல ஒரு 26 ஆம் தேதி 1950 ஜனவரி மாதம் மலர்ந்தது. அதுவே இந்தியாவின் குடியரசுத் திருநாள் ஆயிற்று. அந்த தினம் தமிழர்களுக்குத் துக்க நாள் என்று பெரியார் அறிவித்தார். ஆனால், அண்ணாவோ அது துக்க நாள் அல்ல, கொண்டாட வேண்டிய மகிழ்ச்சிகரமான திருநாள் என்று பெரியாரின் கருத்துக்கு முற்றிலும் முரண்பட்டு பிரகடனம் செய்தார்.
அதே அண்ணா 1965 ஜனவரி 26 ஆம் நாளை துக்க நாள் என்று அறிவித்தார். இந்தியாவில் இந்தி மொழியை மட்டும் ஆட்சிமொழி ஆக்கிய முடிவினை 1965 ஜனவரி 26 அரசியல் சட்ட உத்தரவாதத்தோடு செயல்படுத்தும் நாளாக அமைந்துவிட்டதால், அந்த நாள் இந்தி பேசாத மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு துக்க தினம் என்று அண்ணா கூறினார். அந்த நாளை கருப்பு நாளாக துக்க தினமாக கடைப்பிடிப்போம் என்றும் அறிவித்தார்.
இன்று ஏறத்தாழ அதே மனநிலையில் இருக்கிறேன். அறிஞர் அண்ணா இந்தியக் குடியரசை எதிர்க்கவில்லை. இந்தி பேசாத மக்களுக்குத் தந்த வாக்குறுதியையும் மீறி, இந்தியை மட்டும் அரியணை ஏற்றுகின்ற தொடக்க நாளாக அமைந்ததால், தங்களது எதிர்ப்பையும், கசப்பையும் காட்டுவதற்காக கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தினார்.
அதே போலத்தான் நரேந்திர மோடியின் மகத்தான வெற்றிக்கு மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துவிட்டு, ஈழத் தமிழ் இனப்படுகொலை செய்த இராஜ பக்சே, புதிய அரசின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதைக் கடுமையாக எதிர்க்கிறேன். மே 26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் டெல்லியில் ஜந்தர் மந்தரில் என்னுடைய தலைமையில், மதிமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்துவோம்.
தமிழ் இனப்படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய குற்றவாளியை இந்தியப் பிரதமரின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கச் செய்வது அந்த விழாவின் உன்னதத்தையே அடியோடு நாசப்படுத்தி களங்கப்படுத்துவது ஆகும்.
தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களோடு இராஜ பக்சே புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பது தமிழர் நெஞ்சத்தில் சூட்டுக்கோலைத் திணிக்கும் செயல் ஆகும்.
இந்தியாவில் நரேந்திர மோடி அரசு பொறுப்பு ஏற்றால், நீதியின் கதவுகள் திறக்கும்; நிரந்தர வெளிச்சத்துக்கு வழி பிறக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இராஜ பக்சே இந்தியாவுக்குள் நுழைவதை எதிர்க்க வேண்டியது எங்களின் தவிர்க்க முடியாத கடமை ஆகும் என்பதால், மே 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் காந்திய வழியில் வன்முறையற்ற அறவழியில் எங்கள் கருப்புக்கொடிப் போராட்டம் நடைபெறும் என்பதை கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.’
வை.கோ எப்படி நாடகமாடி ஈழ மக்களின் கண்ணீரை எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதையும் வெளிப்படுத்தும் கட்டுரை: