ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கையின் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் சம்பந்தமாக விசாரணை நடத்த இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படும் என நினைக்கின்றேன்.
இலங்கை தனது தீர்வான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இன்னும் கால அவகாசத்தை ஏற்கனவே கோரியுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற படுகொலைகளை தடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பினால் முடியாது போனது. தற்பொழுது என்ன நடக்கின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தற்பொழுது செய்வதற்கு ஒன்றுமில்லை. இறுதிக்கட்ட போரில் மேற்குலக நாடுகள், அமெரிக்கா, சீனா, ஈரான், இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளும் ராஜபக்ஷவுக்கு உதவின.
போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய திறமையான உரை குறித்து கவனம் செலுத்துங்கள். இலங்கை பயங்கரவாத்தை எதிர்க்கொண்டு இதனை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் நாடுகளின் உள்விவகாரங்களில் பலமிக்க நாடுகள் தலையிடக் கூடாது எனவும் அவர் அமெரிக்காவை மறைமுக சுட்டிக்காட்டி கூறியிருந்தார்.
இது வேடிக்கையான மற்றும் பொய்யான ஏகாதிபத்திய எதிர்ப்பு. இந்த கதையினை ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகள் நம்பின.
குறிப்பாக மனித உரிமை பற்றிய பிரச்சினை குறித்து பேசும் போது ஏகாதிபத்தியம் தொடர்பில் பேசுகின்றனர். இந்த ஏகாதிபத்திய கதையை தயார் செய்து கொடுப்பது பிரித்தானியாவில் உள்ள பெல் பொட்ங்கர் ( Bell Pottinger) என்ற நிறுவனம். இவர்கள் மாக்ரட் தச்சருடன் பணியாற்றியவர்கள்.
ராஜபக்ஷ அரசாங்கத்துடன் நட்புறவை வளர்க்கவே அவுஸ்திரேலிய அரசாங்கம் தமிழர்களுக்கு புகலிடம் அளிப்பதில்லை.
போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பத்தை ஐக்கிய நாடுகள் வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேபோல் பிரித்தானிய பிரதமர் கமரூன் தான் கூறியது போல் வலுவாக செயற்படுவார் என நம்புகிறோம். எப்படி இதற்கு உதவலாம் என நாம் எண்ணி வருகிறோம்.
எமது அடுத்த காணொளியை ஆபிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு காணிப்பிக்க உள்ளோம். இந்த நாடுகளுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் முரண்பாடுகள் உள்ளன.
இதுதான் ராஜபக்ஷவின் ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு காரணமாக அமைந்தது. எனினும் எமது காணொளியின் ஊடாக ராஜபக்ஷவின் பொய்யான ஏகாதிபத்திய எதிர்ப்பை இந்த நாடுகள் புரிந்து கொள்ளும். ஈராக்கிற்கு அடுத்ததாக மக்கள் அதிகளவில் காணாமல் போகும் நாடு ஆஜன்டீனா. இந்த காணாமல் போதல் சம்பவங்கள் ஊடக அவர்கள் இலங்கையின் நிலைமைகளை புரிந்து கொள்ள முடியும். அதன் பின்னர் அது பற்றிய கலந்துரையாடல்கள் நடக்கும்.
என்னிடம் உள்ள தகவல்களை வைத்து போரில் என்ன நடந்தது என்பது பற்றிய கதையை எழுத முடியும். தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பில் குறிப்பாக சட்ட துறையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறிப்பாக, தமிழ் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், சிங்கள படையினர் வடக்கில் சகல இடங்களையும் கைப்பற்றியுள்ளமை, சிங்கள குடியேற்றத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் துரிதமான சிங்களமயமாக்கல், பலவந்தமான நில அபகரிப்பு, திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் என அனைத்திலும் அரசாங்கத்தின் தலையீடு இருக்கின்றது என நான் நம்புகிறேன் என்றார்.
ராஜபக்சவின் போலியான ஏகாதிபத்திய எதிர்ப்பை வெளிப்படுத்தி, தமிழ்ப் பேசும் மக்களே ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானவர்கள் என்பதை உலகிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்குக் கூறுவதற்குத் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அரசியல் தலைமைகள் இல்லை. அவர்கள் ராஜபக்சவிற்கு ஆதரவான வகையில் ஏகாதிபத்தியங்களின் உளவுப்படைகள் போன்றே செயற்படுகின்றனர். தேசியத்தைப் பாதுகாக்கிறோம் என்று கூறும் தமிழ் தலைமைகளின் பின் புலத்திலும் ராஜபக்ச அரசின் பின்புலத்திலும் ஒரே சக்திகளே செயற்படுகின்றன.
இலங்கை பேரினவாதப் பாசிச அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மீண்டும் தோன்றாமலிருப்பதற்காக இதுவரையில் போராட்டங்களை அழித்த நீண்ட அனுபவம் கொண்ட ஏகாதிபத்தியம் சார்ந்த பிழைப்புவாதிகள் தலைமையைக் கையகப்படுத்தியுள்ளனர்.
இவர்கள் இதுவரை நடந்த போராட்டம் தவறுகள் அற்றது என்றும், சரியான திசைவழியிலேயே சென்ற பலமான போராட்டம் என்றும் கூறிவருகின்றனர். அவ்வாறான போராட்டமே அழிக்கப்பட்டதால் இனிமேல் போராட்டம் சாத்தியமற்றது எனவும், ஆகவே ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டு உரிமைகளை விற்று கிடைப்பதைப் பெற்றுக்கொள்வோம் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈழப் போராட்டம் என்பதை தமது பிழைப்பிற்கான உக்தியாகப் பயன்படுத்திவரும் இந்த ஏகாதிபத்திய உளவாளிகளின் எமாற்று வித்தைகளால் போராட்டம் மிக நீண்டகாலத்திற்குப் பிந்தள்ளப்பட்டுள்ளது.
இவற்றை இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மக்கள் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முயல்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கின் புற நிலை யதார்த்தம் என்பது என்ன என்பதையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகள் யார் என்பதையும் அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மத்தியிலிருந்து முன்னணிச் சக்திகளை உருவாக்குவதும், மக்களில் தங்கியிருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்களைத் தோற்றுவிப்பதும் உடனடிப் பணியாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் மக்கள் பற்றுள்ள வர்க்க அரசியல் தலைமையை தோற்றுவிப்பதே அழிவுகளிலிருந்து தமிழ்ப் பேசும் மக்களைப் பாதுகாக்கும். இரண்டாவது கட்டப்பணியாக வெகுஜன அமைப்புக்களைத் தோற்றுவிப்பதும், அவற்றை வளர்த்தெடுப்பதும் போராடப் பயிற்றுவிப்பதும் அவசியமானதாகும்.
ஒடுக்கப்படும் தேசிய இனங்களிடையேயான புரிந்துணர்வும், ஒன்றிணைந்த போராட்டமும், சிங்கள மக்கள் மத்தியில் அரச பாசிசத்திற்கு எதிரான புதிய அணிகளை இனம்கண்டு வளர்ப்பது போன்ற அரசியல் செயற்திட்டங்களுக்கு ஊடாக கட்சியை உருவாக்குவதும் இன்றைய தேவை. மக்கள் கொடிய ஏகதிபத்திய ஆதரவு ஐந்தாம் படைகளை விட அதிகமாகவே அரசியலை அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மீதான ராஜபக்ச இராணுவத்தின் நேரடியான ஒடுக்கு முறைகளும், ஏகாதிபத்தியங்கள் குறித்த புரிந்துணர்வும் தலைவர்களை விட அதிகமாகவே உள்ளன. ஆக, சமூக உணர்வுடையவர்கள் மக்கள் யுத்ததிற்கான ஆரம்பத் தயாரிப்புக்களை மேற்கொள்வது அவசியமானது.