தம்மை பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என அறிமுகம் செய்துகொண்ட சிலரால் சிறீலங்காவிலிருந்து வெளிவரும் ‘ரத்து லங்கா’ என்ற சிங்களப் பத்திரிகையில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டதாக ஊடகத்துறை வட்டாரங்கள் கொழும்பில் தெரிவிததன.
ஜே.வி.பி.யின் சோஷலிச தொழிலாளர் ஒன்றியத்தினால் வெளியிடப்படும் ‘ரத்து லங்கா’ பத்திரிகையின் ஊடகவியலாளரான சஞ்சீவ பத்மசிறி என்பவரே இன்று காலை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது கறுப்பு நில ஜீப் ஒன்றில் பின்தொடர்ந்தவர்களால் வழிமறிக்கப்பட்டு அசசுறுத்தப்பட்டுள்ளார்.
நாராஹென்பிட்டி பகுதியிலுள்ள தன்னுடைய பத்திரிகை அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே கனத்தைப் பகுதியில் வைத்து இவர் வழிமறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வழிமறித்தவர்கள் தம்மை பாதுகாப்பப் படையைச் சேர்ந்தவர்கள் என அறிமுகம் செய்துகொண்டதுடன், பத்மசிறியின் அடையாள அட்டை மற்றும் ஊடக அடையாள அட்டை என்பவற்றைப் பரிசீலனை செய்த பின்னரே அவரை அச்சுறுத்தியுள்ளார்கள்.
பத்மசிறி தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்தையும் அவதானமாகச் செய்ய வேண்டும் எனவும், அதனால் எதிர்காலத்தில் பாரதூரமான பின்விளைவுளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை சோஷலிச தொழிலாளர் ஒன்றியம் முன்னெடுத்துவரும் நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், ‘ரத்து லங்கா’ பத்திரிகையின் ஆசிரியரும், முன்னாள் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்தா இது தொடர்பாகத் தெரிவிக்கையில், இது போன்ற கோழைத்தனமான செயற்பாடுகளுக்கு தானோ தன்னுடைய பணியாளர்களோ அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றார். தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சினைகளுக்காக தமது பத்திரிகை தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.