Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச இந்தியாவுக்குள் வந்தால் அறப்போராட்டம் நடத்துவோம் : திருமாவளவன்

திருமாவளவன் அறிக்கை:

மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா 21-9-2012 அன்று நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு சிங்கள இனவெறியன் ராஜபக்சே வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தன்னுடைய தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏராளமான பௌத்தர்களைக் கொண்ட வாக்கு வங்கியைக் குறியாக வைத்து அதனடிப்படையில் ராஜபக்சேவை அவ்விழாவுக்கு வரும்படி அழைத்துள்ளார்.
தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றியுள்ள ஈவிரக்கமற்ற, மனிதாபிமானமில்லாத ராஜபக்சேவை காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பாரதிய ஜனதாவும் வரிந்து கட்டிக்கொண்டு வரவேற்பதும், ஊக்கப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
அண்மையில் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் குழு இலங்கைக்குச் சென்றிருந்த வேளையில் ராஜபக்சேவை தனியே சந்தித்து நீண்டநேரம் உரையாடியிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். அச்சந்திப்பின் போதே இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்கிற மனிதநேயப் பார்வை ஆளும் கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிக்கும் இல்லை என்பதைத் தான் நம்மால் அறிய முடிகிறது.
இந்தியாவின் எந்த மூலையிலும் சிங்கள இனவெறிக் காடையர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்திலுள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருமே கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள நிலையிலும் இலங்கை, இந்தியாவுக்கு நட்பு நாடு என்றும் அதனால் சிங்களவருக்கு பயிற்சி அளிப்போம் என்றும் மத்திய இணையமைச்சர் பல்லம் ராஜு என்பவர் கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
அதைப் போலவே இன்று சுஷ்மா ஸ்வராஜ் தமிழர்களின் உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் வீம்புக்கு ராஜபக்சேவை அழைத்து வருகிறார். அதற்கு இந்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இக்கட்சிகளின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் ராஜபக்சேவின் வருகைக்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் ராஜபக்சேவை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறப்போராட்டத்தில் ஈடுபடும். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டனக் குரல் எழுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version