Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்சவுக்கு பாடம் புகட்டவேண்டும் : சமூகவிரோதியின் குரல் நிறுத்தப்பட வேண்டும்

இந்தியாவை மிரட்டும் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கைப் படையினர் கொடூரமாக கொலை செய்ததை அறிந்து உலகம் முழுவதும் தமிழர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். ஆனால் நாங்கள் படுகொலை செய்யவில்லை என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றுள்ளார் ராஜபட்ச.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா.வில் நாங்கள் பேச வேண்டியிருக்கும் என்று ராஜபட்ச பேசியுள்ளார். இது கண்டிக்கத்தக்கதாகும்.
சீனா பக்கம் இலங்கை சாய்ந்து விடக் கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி ராஜபட்ச அரசுக்குச் சாதகமாகவே மத்திய அரசு நடந்துகொள்கிறது.
ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடைமைகளைப் பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அந்த அரசுக்கு ரூ.500 கோடியை நிதியுதவியாக மத்திய அரசு அளித்துள்ளது.
ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித் தரவும், சிங்களப் படையினருக்குச் சிறப்பு வசதிகளைச் செய்து தரவும் இலங்கை அரசு செலவழித்து வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா மேலும் நிதியுதவி அளிப்பது தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. தமிழர்கள் பகுதிகள் சிங்களமயமாக்கத்தான் பயன்படும்.
எனவே, இந்தியாவை மிரட்டும் ராஜபட்சவுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, அவருக்குப் பணிந்து ரூ.500 கோடி பரிசு வழங்கக்கூடாது.
இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்ய வேண்டும். இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆதிக்க சாதி வெறியரும் தமிழ் நாட்டில் ஆதிக்க சாதி வெறியர்களை இணைத்து வன்முறையைத் தூண்டி வருபவருமான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது பிழைப்பிற்காக ஈழப்பிரச்சனையில் அடிக்கடி தலையிட்டு வருகிறார். தாழ்த்தப்பட்டோரை ஆதிக்க சாதிகள் திருமணம் செய்வது, காதல் திருமணம் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட எதிர்க்கும் சமூகவிரோதியான ராமதாஸ் போன்றோர் சிக்கல்கள் நிறைந்த ஈழப் பிரச்சனை குறித்துப் பேசுவது நிறுத்தப்பட வேண்டும்.

Exit mobile version