எனினும், நடைபெறவிருக்கும் அரசதலைவர் தேர்தலை ஒட்டி என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து பின்னர் கூடி ஆராய்வது என்றும் அது தீர்மானித்துள்ளது.
ஆனாலும், எதிர்வரும் 17 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ்க் கூட்டமைப்பின் முழுமையான நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கருதப்படுவதால், அதன் பின்னரே கூட்டமைப்பின் முடிவு தொடர்பான தீர்மானம் எட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. எதிர்வரும் 17 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினம் என்பதால் அதற்கு முன்னர், பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய யோசனை குறித்துத் தீர்மானிக்கவேண்டும் எனக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விடயத்தின் சாதக, பாதகங்களை ஆராய்ந்த கூட்டமைப்பு எம்.பிக்கள் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் திட்டத்தைக் கைவிடுவது என முடிவு செய்தனர். எனினும், இந்தத் தேர்தல் தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்துத் தமிழ் மக்களுக்கு என்ன ஆலோசனை வழங்குவது என்பதைப் பின்னர் கூடி முடிவுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இரு பிரதான வேட்பாளர்கள் சார்பிலும் முன்வைக்கப்படும் கருத்துகள், உறுதிமொழிகள் போன்றவற்றை உள்வாங்கி, அதன் பின்னர் அவர்களுள் ஒருவரை ஆதரிப்பது குறித்தோ அல்லது தேர்தலைப் பகிஷ்கரிப்பது குறித்தோ அல்லது பிரதான வேட்பாளர்கள் இருவர் தவிர்ந்த பிறிதொருவரை ஆதரிப்பது குறித்தோ முடிவு செய்யலாம் என்று கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.