Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரகுவை புலிகள் கொல்லவில்லையென பிள்ளையான் கூறியதற்கு அரசின் பதில்:கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க.

21.11.2008.

வடமத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்த விடயங்களை வைத்து நாம் புலிகளை பாதுகாப்பதாக அரசாங்கம் குற்றச்சாட்டு சுமத்தியது. இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தனது பிரத்தியேகச் செயலாளர் ரகுவை புலிகள் கொல்ல வில்லையென்று கூறியுள்ளார். இதற்கு அரசு என்ன கூறப்போகின்றது என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கேள்வியெழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட கேள்வியையெழுப்பினார்.

அவர் இங்கு மேலும் கூறியதாவது;

கருணா தற்போது ஜனநாயக ரீதியில் செயல்படுகின்றார். அவரிடம் சிறுவர் படைகள் இல்லை என அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அண்மையில் மட்டக்களப்பு செங்கலடியிலுள்ள ரி.எம்.வி.பி. காரியாலயம் தாக்கப்பட்டது. இதன்போது அங்கு 15 வயதுடைய புண்ணியமூர்த்தி கமலேஸ்வரன் என்ற சிறுவன் இருந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது என்று அரசாங்கம் கூறியதன் பின்னர் மந்தை வியாபாரிகளின் கொலை, நவோதயா திட்டத்திற்குச் சென்றவர்கள் மீதான தாக்குதல், அண்மையில் இடம்பெற்ற வைத்தியரின் கொலை என்பன இடம்பெற்றுள்ளன இதுதான் ஜனநாயகமா..? அல்லது ஜனநாயகம் என்ற பெயரில் கிழக்கை புலிகளின் மற்றுமொரு குழுவிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளதா..?

2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கானது என்று அரசாங்கம் கூறுகிறது. எனினும், தெங்குக்கான முக்கோண நிலையமாக விளங்கும் புத்தளம் மாவட்டத்தில் தெங்கு பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.

தெங்கு பயிர்ச்செய்கைக்குப் பயன்படும் உரம் இன்னும் 600 ரூபாவாகவே உள்ளது. தென்னைத் தோட்டங்களில் தேங்காயொன்று 13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், நுகர்வோரான மக்களுக்கு 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதேபோன்றுதான், உப்பு உற்பத்தியும் மண்ணெண்ணெயைத் தவிர ஏனைய வளங்கள் அனைத்தும் எமது நாட்டிலேயே பெறப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது.

எங்களுடைய ஆட்சியின் போது வங்கிக் கடன்கள் போன்றவை பெற்றுக்கொடுத்து தொழிலாளர்களை முதலாளியாக்கினோம். 1000 ரூபாவிலிருந்த உப்பு மூடையொன்று இன்று 4000 ரூபாவாக உயர்ந்துள்ளது. அரசாங்கம் என்ன செய்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version