பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. யின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் நல்லூர், கோப்பாய் உட்பட அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களின் தகவல்களை திரட்டுவதற்காக படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு குடும்பம், குடும்பமாக புகைப்படங்களும் எடுக்கப்படுகிறது. அதற்காக 100 ரூபா அந்த மக்களிடமே அறவிடப்படுகின்றது. அன்று ஜேர்மனியில் யூதர்களை அடையாளம் காண்பதற்காக அடையாளச் சின்னம் ஹிட்லரால் வழங்கப்பட்டது. அதேபோன்று இன்று யாழ்ப்பாண மக்களுக்கு எதிராக அம் மக்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெக்கின்றது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரதேச செயலாளருக்கு இது தொடர்பில் எதுவுமே தெரியாது. பாதுகாப்பு அமைச்சின் மூலம் இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
பருத்தித்துறையில் எமது கட்சியில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வீட்டிற்கு அண்மையில் சீருடை தரித்தவர்கள் சென்று குடும்ப விவரங்களையும் தகவல்களையும் பெற்றுள்ளனர். இவ்வாறு இரண்டாம் முறையும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள வேட்பாளர் பிரசாரங்களை முன்னெடுக்க முடியாது வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார். இம் மக்கள் முப்பது வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே சீருடையாட்களை கண்டால் அச்சமடைகிறார்கள். இன்னும் அவர்கள் மத்தியில் யுத்த பயம் காணப்படுகிறது.
அதேபோன்று வவுனியாவில் போட்டியிடம் வேட்பாளரது வீட்டுக்கு சென்ற இரகசியப் பொலிஸார் அவரது தகவல்களை சேகரித்துள்ளனர். வேட்பாளர்களின் தகவல்கள் தேவையென்றõல் தேர்தல்கள் திணைக்களத்தில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சீருடை தரித்தவர்களையும் இரகசியப் பொலிஸாரையும் பயன்படுத்தி அரசாங்கம் மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கின்றது. தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்பிரதேசத்திலுள்ள வேட்பாளர்களுடனான சந்திப்பின்போது கூட்டங்களில் உரையாற்றும்போது ஜனாதிபதியை விமர்சிக்கக் கூடாதென தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். அச் சுற்றறிக்கையை காண்பிக்குமாறு வேட்பாளர்கள் கோரிய போது காண்பிப்பதற்கு மறுத்துள்ளார். அது மட்டுமல்லாது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து கொண்டுள்ளனர். ஆயுதங்களும் பகிரங்கமாக தேர்தல் களத்தில் தலைதூக்கியுள்ளது.
இதுவொரு பயங்கரமான சூழ்நிலையாகும். தேர்தல்களம் ஆயுதக் களமாக மாறியுள்ளது. மறுபுறம் யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்கள் பதிவு செய்வது புகைப்படமெடுப்பதன் மூலம் ஹிட்லரைப் போன்று அராஜகம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிலைமை தொடருமானால் அம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றம் செல்வோம். இன்று எகிப்து, டியூனிசியா போன்ற நாடுகளில் சர்வாதிகாரத்திறகு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலும் இன்று சர்வாதிகாரம் அராஜகம் தலைதூக்கி வருகிறது. இதனை தொடர முடியாது மக்களின் எதிர்ப்புக்கள் ஒரு நாள் வெளியே வரும் என்றார்.