Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்த விடயங்கள் – மகிந்தவுடன் நேரடியாக தொலைக்காட்சி விவாதத்துக்கு தயார்!: சரத் பொன்சேகா.

ஜனாதிபதி மகிந்தவுடன் நேரடியாக தொலைக்காட்சி விவாதத்துக்கு தயார் யுத்த விடயங்கள் உட்பட என்கிறார் ஜெனரல்யுத்த விடயங்கள் உட்பட நாட்டின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடி தொலைக் காட்சி விவாதமொன்றுக்குத் தான் தயாராக இருப்பதாக எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.

பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி.ஆகியவற்றின் முதலாவது செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஜெய்க்ஹில்டனில் நடைபெற்ற போது அங்கு உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமர சிங்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் எதிரணிகள் மீது சேறு பூசும் கலாசாரத்தைக் கைவிட்டு உண்மையை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க முன்வருமாறு கோரிக்கை விடுத்தார்.

நாம் கட்சி அரசியலை ஒதுக்கி உடனடியாக நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவரது நேர்மையிலும் திறமையிலும் நம்பிக்கைவைத்தே நாம் ஒன்று பட்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும், பங்காளிகளும் அவர்மீதும், எதிரணியினர் மீதும் தொடர்ந்தும் சேறு பூசுவதிலும், காடைத்தனங்களை கட்டவிழ்த்து விடுவதிலும் ஈடுபாடு காட்டிவருகின்றனர்.

யுத்த விடயங்கள் உட்பட நாட்டின் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தொலைக்காட்சியில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சவால்விடுக்கின்றோம். நாம் நிறுத்தும் பொது வேட்பாளர் விவாதத்திற்கு தயாராக இருக்கின்றார் என்று தெரிவித்தார்.இந்த வேளையில் ஜெனரல் சரத் பொன்சேகா தனது கையை உயர்த்தி பெருவிரலைக் காட்டி ஜனாதிபதியுடன் நேரடி பகிரங்க விவாதத்துக்கு நான் எந்தவேளையிலும் தயாராக இருப்பதாக அறிவித்தார். என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. யுத்தவிவகாரங்கள் மட்டுமல்ல பொது வான எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மகிந்த ராஜபக்ஷவுடன் விவாதிப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகா தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவதுநான் இன்று கட்சிசார்பற்ற பொது வேட்பாளராகவே ஜனாதிபதி தேர்தலில் நிற்கின்றேன். நாட்டில் ஊழலும் மோசடியும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. முறைகேடான அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஜனநாயக அரசியல் சக்திகள் ஒன்று திரண்டுள்ளன. அவற்றின் பொது வேண்டுகோளுக்கமையவே தான் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். நாடு இன்று ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றது. அத்துடன் அதிகார மாற்றத்தையும் எதிர்பார்க்கின்றது. அதனை நான் நிச்சயமாக மாற்றியமைப்பேன்.

ஜெனரல் பொன்சேகா உலகின் சிறந்த இராணுவத் தளபதி என்று என்னை வர்ணித்தவர்கள், வாயாறப் புகழ்ந்தவர்கள் தான் இன்று என்னை தரக்குறைவாக பேசுகின்றனர். தேசத்துரோகி என முத்திரை குத்தியுள்ளனர்.யுத்த வெற்றி கட் அவுட்களை நாடு பூராவும் வைத்து மின்கம்பங்களில் போஸ்ரர்களை ஒட்டி இவர்கள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். யுத்த முனையில் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வெற்றி கண்டவர்கள் ஒரு புறமிருக்க அதனை தமது வெற்றியாகக் காட்டி அரசியல் பிழைப்பு நடத்த இவர்களுக்கு வெட்கமில்லையா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

நாட்டில் இன்று இரண்டுபேர் தான் வீரர்கள். ஏனையவர்கள் தேசத்துரோகிகளாக காட்டப்படுகின்றனர். இந்த வெற்று வேட்டுக்காரர்களை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.நான் கட்அவுட் அரசியலில் நம்பிக்கை வைக்கவில்லை. மக்களின் இதயங்களில் இடம்பிடிக்கவே விரும்புகின்றேன். நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல எதிர் காலத்தையும், நல்லாட்சியையும் மலரச் செய்வதற்காகவே களத்தில் இறங்கியுள்ளேன்.

நாட்டை விட்டுத்தப்பியோடி 15 வருடங்களாக தாய் நாட்டின் பக்கம் தலைவைத்தும் படுக்காதவர் இன்று நாட்டுப்பற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார். சாதாரண கோப்ரல் நிலையிலிருந்தவர் எனக்கு யுத்த தந்திர பாடத்தைப் புகட்ட முனைகின்றார் என்றும் ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார்.

Exit mobile version