அன்பிற்குரிய சகோதரா!
முன்னரைப் போல
குண்டுகள் வெடித்த ஓசையை மீறி
மனிதர்களின் அழுகைக் குரல்களை மீறி
உனது எகத்தாளமிடும் சிரிப்பை
இப்போதெல்லாம்
கேட்க முடிவதில்லை!
அன்றைய நாட்களில்
அதிகம் பேசுவது நானாய் இருந்தேன்.
இப்போதெல்லாம் நீ!
பலாலி ‘சர்வதேச’ விமானத்தளத்தில்
மனைவி மக்களுடன் போய் இறங்க
வெட்கமின்றி காத்திருந்த நீ
இப்போது
கனவு தூர்ந்து போன நிலையில்
ஏதோவெல்லாம் பேசுகின்றாய்!
யார் யாரோ உயிரைக் கொடுத்து
தம்மை இழந்து
மண்ணினின்றும் மறைந்து போக
நீ அதன் விளைச்சலில்
பலனை அள்ளக் காத்திருந்தாய்.
எவரின் மரணமும் உன்னை அசைப்பதில்லை!
லீலாவதியின் படுகொலைக்கும்
விதுசாவின் மரணத்திற்கும் இடையே
உனக்கு வேறுபாடுகள் இல்லை!
மரணங்களே உனக்கு தேவையாய் இருந்தன.
மரணங்களே உனக்கு விருப்பமாயும் இருந்தன.
சுனாமியை குடித்து முடித்தது போலவும்
பூகம்பத்தின் நெருப்புத் துண்டங்களை
விழுங்கி முடித்தது போலவும்
திணறிக் கிடக்கிறது தேசம்!
யாழ்ப்பாணத்தில்
பாண் ‘சுடும்’ பேக்கரி போடுவதாய்
கனவை மாற்றி கொண்ட நீ
நிம்மதியாய் உறங்க செல்லுகிறாய்!
காற்று வீச மறுக்கும் சுடுகாட்டு நிலத்தில்
பலதிசைகளினின்றும்
பேய்களின் வரவை எதிர்பார்த்து
எனது இதயம்
மெல்ல மெல்ல உறைகின்றது.
விஜி(லண்டன்).