Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தம் நடைபெற்றுவரும் பகுதிகளுக்கு ஐ.நா.வை அனுமதிக்க முடியாது – கோத்தபாய

மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்களை அனுமதிக்க வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

யுத்த சூனியப் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அந்தப் பகுதிகளுக்கு சர்வதேச மனிதநேய அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் செல்ல அனுமதிக்க இயலாது எனவும் கூறியுள்ளார்.

யுத்தம் நடைபெற்றுவரும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்கள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான பிரதித் தலைவர் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையையே இலங்;கை நிராகரித்துள்ளது.

எனினும், யுத்த சூனியப் பகுதியிலிருந்து பெருமளவான மக்கள் வெளியேறியிருப்பதால் அவர்களைப் பராமரிப்பதற்கு சர்வதேச உதவிகள் கட்டாயமானது என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

முகாம்களில் இருப்பவர்களுக்கு தற்காலிக கூடாரங்கள், நீர், நீர்த்தாங்கிகள், மற்றும் சுகாதார வசதிகள் உடனடியாகச் செய்துகொடுக்கப்படவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார். நேற்று வியாழக்கிழமையும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் யுத்தசூனியப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாகவும் பாலித கொஹண குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது இவ்விதமிருக்க, மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிக்கு மிக அண்மையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மாத்திரமே செயற்பட்டு வருகிறது. வேறு எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் மோதல்கள் நடைபெறும் பகுதிக்கு அருகில் செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை.

யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட 350 பேரை கடல்மார்க்கமாகத் தாம் வெளியேற்றியதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான பேச்சாளர் சரசி விஜயரட்ன கூறினார்.

“மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்கள் போதியளவு உணவு, மருந்து மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இன்றி பெரும் ஆபத்தான நிலையிலுள்ளனர்” என்றார் அவர்.

Exit mobile version