யுத்தத்தினால் தன் இரு கண்களையும் இழந்த சிறுமி புலமைப்பரிசில் பரீட்சையில் 147 புள்ளிகளை எடுத்து சித்தியடைந்துள்ளார்.
முன்பு யுத்த காலத்தில் கடுமையான பொருளாதார தடைகளும் மின்தடையும் அமுலில் இருந்தபோதும் தமிழ் மக்களின் கடுமையான உழைப்பும் விடா முயற்சியும் அவர்களது படிப்பு திறனும் அவர்களை நிமிர்ந்து நிற்கவைத்தது. அன்றைய காலத்தில் விவசாயம், கூலி தொழில்கள் செய்து தம்பிள்ளைகளை படிக்கவைத்து உயர்ந்த நிலையை அடையவைத்தனர். அன்றைய மாணவர்கள் தம்பெற்றோருடன் சேர்ந்து அவர்களின் தொழிலுக்கு “விவசாயம், கூலி” ஒத்தாசையாக இருந்து உதவிசெய்து எண்ணெய் விளக்கில் தம் கல்வியை தொடர்ந்து சாதனை படைத்து வந்தனர். இன்று அந்த போராட்ட உணர்வு புலம்பெயர் பணத்தினால் முற்றாக மழுங்கடிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் இன்று இலவச கல்வியையும் இலவச வைத்தியத்தையும் தனியார்மயப்படுத்த முயல்கிறது. ஆனால் இது பற்றி எமது அரசியல்வியாதிகள் வாய் திறப்பதையே காணோம். ஆனால் அவர்கள் ஒன்றை நன்றாக விளங்கிகொள்ள வேண்டும். இலங்கையில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கல்வியையோ மருத்துவத்தையோ காசு கொடுத்து வாங்கிகொள்ளும் நிலையில் இல்லை. அங்கு என்னை போன்ற பல விவசாயிகள் கூலி வேலை செய்பவர்களின் பிள்ளைகள் இன்னமும் உள்ளனர் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்களா? அல்லது தமது இலாபத்திற்காக தெரியாத்து போல் நடிக்கிறார்களா? கல்வியும் மருத்துவமும் தனியார்மயப்படுத்தப்படும்போது போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளும், அடுத்த வேளை உணவிற்காக வேலை செய்து பிழைக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் பிள்ளைகளும் அந்த சேவைகள் கிடைக்காது போய் தனித்துவிடப்படுவர். இதனை தற்போது அந்நிலமையில் இருந்து உயர்ந்திருக்கும் மேல்தரவர்க்கம் நன்றாக விளங்கி அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை நிறுத்தி அனைவருக்கும் இலவச கல்வி மருத்துவ சேவை கிடைக்க போராட முன்வரவேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் ஊரில் இருப்பவர்களுக்கு பணத்தை காட்டி,கெடுத்து, குட்டி சுவராக்கி, போதைக்கு அடிமையாக்கி, சோம்பேறி ஆக்குவதைவிட அவர்களை சுயதொழில் செய்ய ஊக்குவித்து சமுதாய அக்கறையுள்ளவர்கள் ஆக்கி எமது சமுதாயத்தை வளர்க்க முன்வரவேண்டும்!!
செங்கோடன்