09.03.2009.
இலங்கை நிலைவரம் மிகவும் பயங்கரமானதாக இருப்பதாக தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொழும்புக்கான சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருப்பதுடன் யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வுப் பொதியை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்திருக்கிறது.
நிலைமை மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இதுவொரு பாரிய மனிதாபிமான நெருக்கடி. பட்டினி, மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பெரும் எண்ணிக்கையான மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். புலிகளுக்கு எதிரான யுத்தம் தினமும் அதிகரித்து வருகையில் மனிதாபிமான நெருக்கடியும் அதிகரித்து வருகின்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று பி.ரி.ஐ.செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு யுத்தத்தை நிறுத்தவேண்டுமென வலியுறுத்திய அவர், அரசியல் தீர்வுப் பொதியை முன்வைக்குமாறு கொழும்புக்கு இந்திய அரசு கூறவேண்டுமென இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கைத் தமிழரின் நியாய பூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றும் விதத்தில் தீர்வுத் திட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியா சகல விதமான இராணுவ உதவிகளையும் நிறுத்த வேண்டும்.
இலங்கைக்கு புதுடில்லி உதவுவது தொடர்பான மக்கள் மனநிலையை அரசாங்கம் சோதனைசெய்து பார்க்க வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க., பா.ம.க.ஆகியவற்றுக்கும் பொறுப்பு உண்டு என்றும் ராஜா கூறியுள்ளார்.