Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தத்தில் காயமடைந்தவர்களின் 113 சிறுவர்கள் : பிள்ளையான்

வன்னியில் யுத்த சூழ்நிலை காரணமாக காயமடைந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 113 சிறுவர்களும் அடங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன தெரிவித்தார்.திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த மக்களை இன்று மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஆளுநர் மொகான் விஜயவிக்கிரம ஆகியோர் உட்பட பலரும் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

கப்பல் மூலம் காயமடைந்தவர்களும் அவர்களது உறவினர்களும் என 369 பேர் அழைத்து வரப்பட்டிருந்ததாக மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 12 வயதுக்குட்பட்ட 113 சிறுவர்களும் 9 கர்ப்பிணிப் பெண்களும் மற்றும் ஆண்,பெண் என மேலும் 147 பேரும் அடங்குவதாகத் தெரிவித்த அவர் வரும் வழியில் 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மேலும் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்திசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களுக்கு வேண்டிய சிகிச்சைகளை அளிப்பதற்குரிய சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தான் அதிகாரிகளைப் பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Exit mobile version