ஊடகங்களுக்கான அறிக்கை 15.02..2010
இவ்வாறு புதிய- ஜனநாயக கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றறுவது பற்றி அதன் மத்திய குழு எடுத்துள்ள முடிவை கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல். வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில், இன்றைய சூழலில் கடந்த அறுபத்தி மூன்று வருடகால முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் எவற்றை அனுபவித்து வந்தார்கள் என்பது சிந்தித்துப்பார்க்கப்பட வேண்டியதாகும். வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் பாராளுமன்றப் பதவிகளைப் பெறுவதிலும் அதன் மூலமான சுயநல சுக போகங்களை அனுபவிப்பதிலும் தமிழ் முஸ்லிம் மலையகத் தலைமைகள் முன்னின்ற அளவிற்கு மக்களின் அடிப்படை வாழ்வில் எவ்வித மாற்றங்களையும் பெற்றுத்தரவில்லை. அதற்குக் காரணம் ஆதிக்க அரசியலை முன்னெடுத்த பழைமைவாத பிற்போக்கு கொள்கைகளைக் கொண்ட கட்சிகளினதும் தலைமைகளினதும் செயற்பாடேயாகும்.
குறிப்பாக வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த தவறான அரசியல் மார்க்கமே இன்றைய அவலங்களுக்கும் மக்கள் தவித்து நிற்பதற்கும் காரணமாகும். அத்தகைய பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் தவறான தலைமையையும் வழிகாட்டலையும் மக்கள் இவ்வேளை உற்று நோக்க வேண்டும். அதனாலேயே பாராளுமன்றப் பாதையாலும் போராட்டப் பாதையாலும் மக்களுக்கு விமோசனம் பெறும் வழிகளைக் காட்ட முடியவில்லை. அதே பழைமைவாத பிற்போக்குத் தமிழ்த் தேசியவாத சக்திகளே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஊடாக மீண்டும் தமது ஆதிக்க அரசியலை முன்னெடுக்க முனைந்து நிற்கின்றன. இதனை இத் தேர்தலில் முறியடிக்கவும் புதிய மாற்று அரசியல் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் முன் வைக்கவுள்ள ஒரே வழி மக்கள் சார்பு மிக்க ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஐக்கியப்பட்டு ஒரே அணியாகி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு நிற்பதேயாகும். அதன் மூலம் பழைமைவாத பிற்போக்கு சக்திகளையும் அவர்களது குறுகிய ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டையும் அம்பலப்படுத்தி எதிர்க்க முடியும். அத்துடன் புதிய மாற்று அரசியலை மக்கள் மத்திக்குக் கொண்டு செல்லவும் மக்களை ஒரு வெகுஜனப் போராட்ட அரசியல் மார்க்கத்தில் அணிதிரளச் செய்வதற்கும். இது நல்ல ஒரு சந்தர்ப்பமாகும்.
தமிழ் முஸ்லீம் மலைய மக்களைப் பிளவுபடுத்தி குறுக்கு வழிகளையும் இனவாத உணர்ச்சிகளையும் குறுகிய சாதிவாதத்தையும் கிளறிவிட்டு வெறுப் பாராளுமன்ற ஆசனங்களைப் பெறும் சுயநல நோக்கங்களை தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். அதன் மூலம் புதிய மாற்று அரசியலை முன்னெடுக்க முன் வரல் வேண்டும். அதுவே தமிழ் சிங்கள முஸ்லீம் மலையத் தமிழ் உழைக்கும் மக்களை ஓரணியில் அணிதிரட்ட வல்லதுமாகும்.
அதனாலேயே ஜனநாயக இடதுசாரி முற்போக்கு சக்திகளும் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே அணியாக நின்று இத்தேர்தலில் பங்கு கொள்ள வேண்டும். அதன் மூலமே பேரினவாத ஆளும் வர்க்க முதலாளித்துவ சக்திகளையும் அவற்றின் இன, வர்க்க, சாதிய, பால் ஒடுக்கு முறைகளையும் அவற்றுக்கு துணை நிற்கும் ஏமாற்றுத் தலைமைகளையும் நிராகரித்து ஒரங்கட்டி உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் விடுதலை பெறக் கூடிய புதிய மாற்று அரசியல் திசை மார்க்கத்தில் பயணிக்க முடியும் என்பதை எமது கட்சி வற்புறுத்தி நிற்கிறது.
– சி.கா.செந்திவேல் –
பொதுச் செயலாளர்