Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தத்தின் ஓர் அம்சமே மனித உரிமை மீறல்கள். இவற்றை தவிர்க்க முடியாது:திஸ்ஸ விதாரண .

07.08.2008.

யுத்தத்தின் ஓர் அம்சமே மனித உரிமை மீறல்கள். இவற்றை தவிர்க்க முடியாது. ஆனால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; “”யுத்தம் நடைபெறும் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதை தவிர்க்க முடியாதெனக் கூறுவதனால் நான் அதற்கு ஆதரவானவன் அல்ல. மனித உரிமைகள் என்பது வளரும் நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்த நாடுகளிலும் காணப்படுகின்றன. வறுமை ஏற்பட்டாலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும்.
ஆனால், இந்த மனித உரிமை மீறல்களை சாட்டாக வைத்துக் கொண்டு சர்வதேச சூழ்ச்சிக்கார நாடுகள் எமது நாட்டில் தலையிடுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. எனவே, நாம் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இலங்கையில் இருப்பது முரண்பாட்டின் அடிப்படையிலான அரசியல் பிரச்சினையாகும். தமிழ் பேசும் மக்கள் பாதகமான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

சர்வகட்சிக் குழு இதுவரை 78 தடவைகள் கூடியுள்ளது. மூவின மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுக்கான 90 வீத விடயத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால், இரு கட்சிகள் பங்கேற்காததால் அதில் சில கால தாமதங்கள் ஏற்பட்டன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பங்குபற்றினால் தான் தாமும் பங்கு பற்றுவோமென கூறினார்கள். கடந்த கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் பங்குபற்றியதால் குறிப்பிட்ட இரு கட்சிகளும் அடுத்த கூட்டத்திற்கு வருவார்களென நம்புகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தீர்வுக்காக முன்வைத்த ஆவணம் ஏனைய கட்சிகளின் ஒப்புதலுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

நாம் முழுமையான கருத்தொருமைப்பாட்டைக் கட்டியயெழுப்பியதுடன், ஐ.தே.க.வும் வரும் என நம்புகின்றேன். ஜே.வி.பி., தமிழ்க் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்தோம். ஆனால், அவர்கள் எமது அழைப்பை ஏற்கவில்லை.

இச் சர்வகட்சிக் குழுமூலம் தமிழ், சிங்கள மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றைக்கான முடியுமென்ற நம்பிக்கை எமக்குண்டு.

Exit mobile version