Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தத்தினால் சிறுவர் வாழ்வில் எற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் பாரதூரமானது: சிறுவர் பாதுகாப்பு நிறுவனம்.

இலங்கையின் வடபகுதியில் அரசாங்க படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்று வரும் யுத்தம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மேலும் விரிவடைந்து வருவதனால் ஏராளமான சிறுவர்களும் சிவிலியன்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களில் பலர் தொடர்ந்து யுத்தப் பிரதேசங்களிலிருந்து தப்பிச் செல்வதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
யுத்தம் நடைபெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பான அரசாங்கப் பகுதிகளுக்குள் பிரவேசித்துள்ள 57,000 பேருக்கும் அதிகமானோரில் 12,000 பேர் பாடசாலைச் சிறுவர்களாவர் என்று வவுனியா பிரதேச கல்வி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

யுத்தம் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள மேலும் பெருமளவு சிறுவர்களும் சிவிலியன்களும் காயப்படுதல், உயிரிழப்பு மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு போன்ற ஆபத்துகளுக்குள்ளாகிறார்கள். இலாப நோக்கற்ற அமைப்பான சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் வவுனியாவில் 17 இடைத்தங்கல் நிலையங்களில் தற்காலிக கற்றல் பிரிவுகளை அமைக்க உதவியுள்ளது. யுத்தத்திலிருந்து தப்பி வந்த 44,000 க்கும் அதிகமானோர் இந்நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் இதுவரை 10 இடைத்தங்கல் நிலையங்களில் கற்றல் பிரிவுகளை ஆரம்பித்துள்ளது.

சிறுவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதிப்படுத்த தாங்கள் முயன்று வருவதாகத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் தாங்கள் கற்றல் உபகரணங்களையும் வேறு உதவிகளையும் வழங்கி வருவதாகவும் கூறினார்.

காலை உணவையும் வழங்கிவரும் சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் வகுப்புகளை நடத்துவதற்காக இடம்பெயர்ந்தவர்களிலிருந்து 48 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளது. நிலைமை மிகவும் கஷ்டமாக இருக்கின்ற போதிலும் இப்பிள்ளைகள் அவர்களது கல்வியைத் தொடர்வதற்கு தமது நிறுவனம் தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் கூறினார்.

யுத்தத்தினால் குறைந்தது 60,000 சிறுவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கல்வியிலும் சிறுவர் வாழ்விலும் எற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் பாரதூரமானது என்று நிறுவனத்தின் பேச்சாளர் மேனகா கல்யாணரத்ன தெரிவித்தார்.

தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு நகரின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் கடும் சண்டையில் சுமார் 150,000க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் இத்தொகையை சுமார் 70,000 ஆக இருக்குமென மதிப்பிட்டுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்த தெற்காசிய தீவு நாடு, அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சிவில் யுத்தத்தில் சிக்கியுள்ளது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கென தனி நாடு கோரி போராடி வருகிறார்கள்.

பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வசிக்கும் இந்நாட்டில் இடம்பெறும் ஆயுதப் போராட்டத்திற்கு இதுவரை 70,000 பேர் பலியானார்கள். கடந்த மூன்று மாதங்களில் யுத்தப் பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தப்பி வந்துள்ளார்கள்.

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் 7,000க்கும் அதிகமானோர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர் என்று மனித உரிமைகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். மேலும், பலர் வருவார்களென தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பேச்சாளர் கோர்டன் வெல்ஸ் கருத்து தெரிவிக்கையில்;

போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள மேலும் பலர் தப்பிவருவதற்கு முயற்சிப்பார்கள் என்று தெரிவித்தார். யுத்த பிரதேசங்களுக்கு வெளியிலேயே அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அவர் கூறினார்.

செஞ்சிலுவைச் சங்க சர்வதேச குழுவும் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இலங்கைக் கடற்படையின் உதவியுடன் 6,600 காயமடைந்தோரையும் நோயுற்றவர்களையும் யுத்தப் பிரதேசங்களிலிருந்து கடல் மார்க்கமாக வெளியே கொண்டுவந்துள்ளது. கடும் சண்டை காரணமாக கடந்த ஜனவரி மாத பிற்பகுதியிலிருந்து தரை மார்க்க வாகன பவனிகள் செல்ல முடியாதிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக உணவுத் திட்ட நிறுவனமும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்ல படகுச் சேவையைப் பயன்படுத்தி வருகிறது. பெப்ரவரி மாதத்திலிருந்து 2,200 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக உலக உணவுத் திட்டப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் இந்நிறுவனம் மிகப் பெரும் தொகையான ஆயிரம் மெற்றிக் தொன் நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்பியுள்ளது. அப்பகுதி மக்களின் மிக இக்கட்டான நிலைமையில் தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட மிகப்பெரும் தொகை இதுவாகும் என்று உலக உணவுத் திட்டப் பிரிவின் இலங்கை அதிபர் அத்னான் கான் தெரிவித்தார்.

யுத்தப் பிரதேசத்தினுள் தொடர்ந்தும் இருப்பவர்கள் யுத்த வலயத்தின் எல்லையில் நிறுவப்பட்டுள்ள 12 கிலோ மீற்றர் யுத்த சூனிய வலயத்தினுள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

யுத்த சூனிய வலயம் அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் பின் வாங்கி இந்த வலயத்தினுள் புகுந்து சிவிலியன்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று பாதுகாப்பு அமைச்சும் இராணுவமும் தற்போது தெரிவித்து வருகின்றன. விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வலயத்திலிருந்து விமானப்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மீது இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. மார்ச் மாதம் 25 ஆம் திகதி காயப்பட்ட இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற இந்த ஹெலிகொப்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் ஹெலிகொப்டர்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் சிறுவர் பாதுகாப்பு நிறுவனமும் யுத்தப் பிரதேசத்தினுள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்று எச்சரிக்கை செய்துள்ளன. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யுத்தப் பிரதேசங்களிலிருந்து சிவிலியன்கள் அவர்களது விருப்பப்படி வெளியேறுவதற்கு இடமளிக்குமாறு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி விடுதலைப் புலிகளிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிவிலியன்கள் பெருமளவு உயிர்ச் சேதங்களை எதிர் கொள்வதுடன் பேராபத்தில் சிக்கியுள்ளனர் என்றும் கடும் சண்டை நடைபெறும் மிகக் குறுகிய பிரதேசத்தினுள் புலிகள் சிவிலியன்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக முடக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் இலங்கையின் வன்னிப் பிராந்தியத்திலிருந்து தொடர்ச்சியாக வெளிவரும் அறிக்கைகள் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். சிலர் அங்கிருந்து வெளியேறவோ தப்பிச் செல்லவோ முடிந்துள்ள அதேவேளை மற்றையோர் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதுடன் அங்கிருந்து விலகிச் செல்லவும் அனுமதிக்கவில்லை என்று நம்பகமான தகவல்கள் தெரிவிப்பதாக பான் கீ மூனின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலி இயக்கத்தினுள் சிறுவர்கள் சேர்க்கப்பட்டு யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கிறது. சிவிலியன்கள் அவர்களது சுதந்திரமான சொந்த விருப்பப்படி யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு செயலாளர்நாயகம் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திடம் கேட்டுள்ளார். சிவிலியன்களின் நடமாடும் சுதந்திரம் மீது புலிகள் கடும் கட்டுப்பாடாக இருப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். சிவிலியன்களை அதுவும் சிறுவர்களைப் பலவந்தமாக இயக்கத்தில் சேர்ப்பது குறித்தும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

படகுச் சேவை காரணமாக யுத்த சூனிய வலயத்தினுள் சென்றுவரும் செஞ்சிலுவைச் சங்க சர்வதேச குழுவும் அங்கு நிலைமை மிக மோசமாக இருப்பதாக எச்சரிக்கை செய்துள்ளது.

பல சிவிலியன்கள் ஏவுகணைக் காயம் காரணமாக அங்கங்களை அகற்றும் நிலைக்கு உள்ளாகியுள்ளார்கள். அகற்றப்படும் அங்கங்கள் தவிர்ந்த ஏனைய அங்கங்களிலும் ஏவுகணைச் சிதறல்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி வருகிறோம் என்று இடம்பெயர்ந்த சிவிலியன்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவைச் சங்க மருத்துவர் மாட்டின் ஹேர்மன் தெரிவித்தார்.

காயங்களுக்கு அன்டிபயற்றிக்ஸ் மருந்து இடாமல் இருந்தாலும் கிரமமாக பன்டேஜ்களை அகற்றி புதிதாக மருந்திட்டுக் கட்டாமலும் இருந்தால் மிக வேகமாகத் தொற்றுகள் ஏற்படும். தங்களிடம் வரும் சிலரின் காயங்களுக்கு சாரத் துண்டுகள் அல்லது ரிசேட் துண்டுகள் சுற்றிக் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்த மருத்துவர் ஹேர்மன் எலும்பு முறிவுகளுக்கு ஆதாரமாக பலகைத் துண்டுகள் வைத்துக் கட்டப்பட்டிருப்பதால் காயமடைந்தவர் கடும் வேதனைக்கு உட்படுகிறார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளை அவதானிப்பதற்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கீலின் இலங்கைக்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இங்கு வந்த போது உயர் அரசாங்க அதிகாரிகளை சந்தித்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் வவுனியாவுக்கும் விஜயம் செய்து இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டார்.

ஐ.பி.எஸ்.

Exit mobile version