அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் ஒரு மாதத்தில் ஒரு வருடத்தில் அன்றேல், இரண்டு வருடத்தில் அன்றேல், ஐந்து வருடத்திலேனும் ஏதேனும் நடைபெறவில்லை என்றால் அது பத்து வருடத்தின் பின்னர் 20 வருடத்திலேனும் ஏதேனும் நடைபெறக் கூடும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஐ.நா. குழுவின் அறிக்கை தொடர்பாகவும் அதற்கு அரசாங்கம் பிரதிபலிப்பு தொடர்பாகவும் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஐ.நா. குழுவின் அறிக்கையானது அடிப்படையில் தவறானது. பக்கச் சார்புடையது என ஆரம்ப கட்டமாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது. அதுமட்டுமன்றி அரசாங்க அமைச்சர்களும் இதே வாதத்தை திரும்ப திரும்ப கூறியிருந்ததுடன் சில அரசாங்கங்களும் சில தரப்பினரும் விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது போன்ற பல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த அறிக்கை தொடர்பில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய சாதாரண விடயமாக ஒன்றை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதாவது இந்த அறிக்கை வெளிவந்து விட்டது.
தற்போது ஆவண வடிவில் காணப்படுகின்றது என்பது உண்மையாகும். அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மட்டில் ஒரு மாதத்தில் ஒரு வருடத்தில் அன்றேல், இரண்டு வருடத்தில் அன்றேல், ஐந்து வருடத்திலேனும் ஏதேனும் நடைபெறவில்லையென்றால் அது பத்து வருடத்தின் பின்னர் அன்றில் 20 வருடத்திலேனும் நடைபெறக்கூடும்.
அறிக்கை தற்போது இருக்கின்றது. அறிக்கை இருக்கும் வகையில் அது அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாக அறிக்கை காணப்படும்.
இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி காணும் வகையில் அதற்கு பொருத்தமான பாணியில் பதிலளிக்க வேண்டிதே அரசாங்கத்திற்கு முன்பாக உள்ள சவாலாகும்.
உள்ளூர் அரசியல் கோணத்திலேயே இந்த அறிக்கை விடயத்தை அரசாங்கம் கண்டு கொண்டு உலகமே ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றதென அர்த்தம் கற்பிக்க முனைந்தால் அது உள்ளூரிலே அரசாங்கத்திற்கு சாதகமான போக்கை கொண்டு வரலாம்.
ஆனால் நிகழ்கால உலகில் ஒரு நாடானது உள்ளக உறவுகளை பேணுவதுடன் வெளிநாடுகளுடனான உறவுகளையும் பேண வேண்டியது முக்கியமானதாகும். அந்த வகையில் குறுகிய பார்வையில் உள்நாட்டிலேயே இதனைப் பார்க்க அரசாங்கம் முற்படுமாக இருப்பின் அது முட்டாள்தனமாகும்.
பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பில் முறையான தேசிய பொறிமுறையொன்று காணப்பட வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகக் குறைந்த பட்சமாக அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். பதிலளிக்கும் கடப்பாடு குறித்த தேசிய பொறி முறையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
இதன்படி நான் எதனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றால் தேசியப் பொறிமுறை என்பது ஒரு ஆணைக்குழுவாய் இருக்கும் இடத்து அதில் இடம்பெறுகின்றவர்கள் ஜனாதிபதியினாலோ, அன்றேல் அரசாங்கத்தினாலோ நியமிக்கப்படும் பிரதிநிதிகளாக மாத்திரம் இருக்கக் கூடாது.
எதிர்க்கட்சிகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடம்பெற வேண்டும். அறிக்கை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது சட்டவிரோதமென ஆரம்பத்தில் அரசாங்கம் கூறியிருந்தது. அதன் பின்னர் சென்று அந்தக் குழுவை அரச தரப்பு சந்தித்திருந்தது. அந்தக் குழுவை சந்தித்ததன் மூலம் குழுவிற்கு அரசாங்கம் கணிசமான அளவு சட்டபூர்வ அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. அந்தக் குழுவானது சட்டவிரோதமென்று உண்மையாகவே அரசாங்கம் நம்புமிடத்து ஏன் அந்தக் குழுவை சென்று சந்தித்தது.
அந்த வகையில் அரசாங்கம் அந்தக் குழுவையோ அதன் பரிந்துரைகளையோ நிராகரித்து விட முடியாது. இதேவேளையில் விடுதலைப் புலிகள் இழைத்த குற்றங்கள் தொடர்பில் அச்சொட்டாக சுட்டிக்காட்டுகின்ற மிகவும் முக்கியமான சர்வதேச ஆவணமொன்று தற்போது நமக்கு முன்பாக காணப்படுகிறது.
அரசாங்கம் இழைத்த யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாத்திரமே கவனம் செலுத்த முடியும் என புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் குழுக்களும் நம்புவார்களாக இருப்பின் ஐ.நõ. குழுவின் அறிக்கையானது இரண்டு தரப்புமே இதனை செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதனை அவர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.