கடந்த 23 ஆம் திகதி யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இலங்கை மருத்துவச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழந்து கொண்டிருந்த சமயம், நூற்றுக்கணக்கான தென்னிலங்கைச் சிங்கள மக்கள் உள்ளே நுழைய முயன்றனர். அசமயம் நூலகத்துக்குள்ளே பொது மக்கள் நுழைவது கட்டுப்படுத்தப்ட்டிருந்ததுடன் அது தொடர்பான அறிவித்தலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நூலகப் பாதுகாப்பு அதிகாரிகளும் உள்நுழைய முயன்றவர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தியுமுள்ளனர். ஆயினும் வந்தவர்களில் சிலர் தாம் ஜனாதிபதியின் செயலகத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறிக்கொண்டு இராணுவத்தினர் சிலரின் உதவியுடன் பலவந்தமாக கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ்.மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவிற்கு மனுவொன்றை அனுப்பிவைத்துள்ளார். அம்மனுவில்,
சட்டத்துக்கு முரணான , விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பெயரை முறையற்ற வகையில் பயன்படுத்தியிருக்கிறார்கள் அல்லது துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். இத்தகைய செயல்களுக்கு ஜனாதிபதி செயலகம் உறுதியளித்திருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன்.
சிங்களப் பொது மக்களின் மனங்களில் இருந்து வன்மம், குரோதம், கடும்பகை என்பன அழிக்கப்படாதவரையில் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவாலோ வேறெந்த ஆணைக்குழுவாலோ இனங்களுக்கிடையிலான நல்லுறைவையும், புரிந்துணர்வையும் கொண்டுவரமுடியாது.
அரசியலுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் தமக்குச் சமமான குடிமக்களே என்ற உண்மையை சிங்களப் பொதுமக்களும் அனைத்து அரச அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மேலாதிக்க மனோபாவத்துடன் தமிழர்களை அணுகுவதையும் அவர்கள் நிறுத்த வேண்டும். தெற்கின் அனைத்து தலைவர்களும் இந்தக் கடமையை உறுதிப்படுத்த வேண்டும் என சி.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.நகர செல்வா சதுக்க வளாகத்தில் விஷமிகள் கைவரிசை !
யாழ.நகரில் அமைந்துள்ள எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவாலய வளாகத்தினுள் இருந்த மரங்கள் பல வெட்டிச் சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாழை மற்றும் செவ்விளநீர் மரங்கள் பல வெட்டப்பட்டுள்ளன. நினைவாலயத்தின் அருகில் இராணுவ முகாம் அமைந்துள்ளது என்பதுடன் நினைவாலயத்தைச் சுற்றி; மதில் மற்றும் பாதுகாப்பு இரும்பு வலை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இரும்பு வலைகளை வெட்டி உட்புகுந்து வளாகத்தினுள்ளிருந்த மரங்களை வெட்டியுமிருக்கிறார்கள்.