Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் -பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை : சிங்கள மக்கள் போராட்டம்

யாழ் -பல்கலைக்கழக மாணவர் விடுதியில் படையினர் அத்துமீறி உட்புகுந்த சம்பவத்தில், படையினரால் உதயன் பத்திரிகை ஆசிரியர் தேவநாதன் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதலைக் கண்டித்தும், ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அத்துடன் , மேற்படி யாழ் -பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வன்முறை, கைதுகள், இன அடக்கு முறைகளைக் கண்டித்து,, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கமும் ஊடகப் பிரச்சார நடவடிக்கையை இன்று மேற்கொள்ளவுள்ளனர். இதேவேளை நாளை (03.12) களனி, பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இருந்து வரும் செய்திகளின்படி, கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யும் வரை கால வரையறையற்ற விரிவுரைப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களான தர்ஷானந், கணேஷமூர்த்தி சுதர்ஷன், கனகசபாபதி ஜெகத்மேனன், சொலமன் ஆகியோரை விடுதலை செய்யும் வரை அனைத்துப் பீட மாணவர்களும் கால வரையறையற்ற வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version