Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் குடாநாட்டு குற்றச் செயல்கள் – உடனடியாகப் பதில் தர முடியாது : இலங்கை அரசு

யாழ்.குடாநாட்டில் இடம் பெற்று வரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை சபையில் கொண்டு வந்த கவனயீர்ப்பு பிரேரணைக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க மறுத்துவிட்டது.பாராளுமன்றத்தில் நேற்று இந்த கவனயீர்ப்பு பிரேரணையை சமர்ப்பித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.மாவை சேனாதிராஜா, இந்த பிரச்சினை தொடர்பில் பிரதமர் இன்று (நேற்று) பதிலளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்ட போது, இந்த பிரேரணை பற்றி ஆளுந்தரப்பிற்கு ஏற்கனவே அறியத்தரப்படவில்லையெனக் காரணம் காட்டி அது தொடர்பில் உடனடியாக பதிலளிக்க முடியாதென சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துவிட்டார்.

கவனயீர்ப்பு பிரேரணையை சமர்ப்பித்த மாவை சேனாதிராஜா, யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் பற்றிய சம்பவங்களை அவை இடம்பெற்ற திகதிகளுடன் குறிப்பிட்டு, இதை அவசர பிரச்சினை என்பதால் மூத்த அமைச்சர்கள் இது பற்றி ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

அத்துடன் பிரதமர் இது பற்றி நேற்றைய தினமே சபையில் பதிலளிக்க வேண்டுமென்றும் மாவை சேனாதிராஜா கேட்டுக் கொண்டார். எனினும் உடனடியாக பதிலளிக்குமாறு முன்வைத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த பிரேரணையின் பிரதி எமக்கு ஏற்கனவே வழங்கப்படவில்லை. அது மட்டுமல்லாது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இது பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆகவே இந்த நிலையில் இதற்கு பதிலளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

எனினும் பிரேரணை பற்றிய விபரம் ஏற்கனவே பாராளுமுன்ற செயலாளர் நாயகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும், அதை ஆளுந் தரப்பிற்கு வழங்க வேண்டியது செயலாளர் நாயகத்தின் பொறுப்பு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அதை சமர்ப்பித்திருந்தாலும் சபை முதல்வரின் அலுவலகத்துக்கும் பிரதியொன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததுடன், பிரேரணையின் பிரதியை ஆளுந் தரப்புக்கு வழங்க வேண்டியது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் கடமையல்ல என்று சபாநாயகரும் சுட்டிக்காட்டினார்.

எனினும், உடனடியாக பதில் வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தவே, உடனடியாக பதிலளிப்பதென்றால் குற்றச்சாட்டுகளை மறுக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்த நிமல் சிறிபால டி சில்வா, அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே விடயங்களை ஆராய்ந்து அரசாங்கத்தின் பதிலை வழங்குவதாகக் கூறினார்.

இந்த நிலைமையில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி.,23(2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் பற்றி மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறதே தவிர வேறு யார் பற்றியும் அதில் இல்லை என்று சுட்டிக் காட்டியதுடன், அதன் பிரகாரம் செயலாளர் நாயகத்துக்கு மட்டும் அறியத்தந்தால் போதுமானது என்றும் அதுவும் இந்த பிரேரணை உரிய காலத்துக்கு முன்னதாகவே சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

எனினும், 23(2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் விடயத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டுமென சபாநாயகர் ராஜபக்ஷ சுட்டிக் காட்டினார்.

இதேநேரம், இது அவசர பிரச்சினையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் வலியுறுத்தவே, அது வேறு விவகாரம் என்றும் அதை எப்படி கொண்டு வர வேண்டும் என்பதற்கொரு முறை இருப்பதாகவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இறுதியில் நிலையியற் கட்டளையின் பிரகாரம் கொண்டு வரப்படும் பிரேரணை விடயத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மீண்டும் சுட்டிக்காட்டிய சபாநாயகர், எப்படியிருப்பினும் பிரேரணை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுவிட்டமையால் இது தொடர்பாக பதிலை அரசாங்கம் பிறிதொரு தினத்தில் வழங்க முடியும் என்றார்.

Exit mobile version