Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் குடாநாட்டில் மீண்டும் தீவிரமாகியுள்ள கொலைகள், கடத்தல்கள் தொடர்பாக : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கடந்த காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காணாமல்போயுமுள்ளனர். அவ்வாறான நிகழ்வுகளால் தமிழ் மக்கள் மரண பயத்தில் உறைந்து போயுள்ளனர். அதிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை.

இந்நிலையில் யாழ் குடாநாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் குடாநாட்டு மக்கள் தொடர்ந்தும் மரண பயத்துடனேயே வாழ் வேண்டிய நிலைக்குள் தள்ளியள்ளது.

• கடந்த 11-12-2010 அன்று மாலை 6.00 மணியளவில் யாழ் சங்கானை முருகமூர்த்தி ஆலய பிரதம குருக்களின் வீட்டினுள் நுழைந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நித்தியானந்த சர்மா(55) அவர்களும் அவரது பிள்ளைகளான nஐகானந்த சர்மா(32) சிவானந்தசர்மா(32) ஆகியோர் படுகாயமடைந்தனர். பின்னர் நித்தியானந்த சர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

• கடந்த 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை யாழில் தேசிய பாதுகாப்பு தினத்தை ஸ்ரீலங்கா அரசு கொண்டாடிய அதே தினம் இரவு 10.00 மணியளவில் வலிகாம் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவலிங்கம் அவர்களது வீட்;டினுள் நுழைந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுப் படுகெலை செய்தனர்.

• கடந்த 26-12-2010 அன்று மீசாலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செல்வம் என்பவர் கடத்தப்பட்டிருந்தார். மூன்று நாட்களின் பின்னர் அவரது உடல் கனகம்புளியடிச் சந்திக்கு அண்மையில் புதைக்கப்பட்டிருந்தமை கொடிகாமம் பொலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

• கடந்த 30-12-2010 அன்று உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் விக்னேஸ்வரன்(30) என்ற தனியார் கல்வி நிலைய ஆசிரியர் உரும்பிராய் மூன்று கோவிலடியில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளை வானில் சென்ற ஆயததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

• கடந்த 30-12-2010 அன்று இரவு ஊர்காவற்துறை தம்பாட்டிப் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் நடராசா சிந்தாமணி(78) , இவரது மகள் இ.ராஐலக்ஸ்மி(48) ஆகிய இருவரையும் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

• கடந்த 31-12-2010 அன்று அல்வாய் கிழக்கைச் சேர்ந்த யோகநாதன் புஸ்ப்பாதேவி(48) என்ற தாய் ஒருவர் வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

• கடந்த 31-12-2010 அன்று இரவு வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் உள்ள தேவராசா கேதீஸ்வரன் என்பவரது வீட்டினுள் புகுந்த இரண்டு முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் கேதீஸ்வரனை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

• கடந்த 01-01-2011 அன்று சிலகுல வீதி, உரும்பிராய் தெற்கு உரும்பராய் என்ற முகவரியைச் சேர்ந்த சோதிநாதன் கோபிநாத் (27) என்ற ஆட்டோ சாரதி கடத்தப்பட்டுள்ளார்.

• கடந்த திங்கட்கிழமை (3-1-2011) அன்று உரும்பிராய் யோகபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அமல்ராஐ;(35) என்ற 5 பிள்ளைகளின் தந்தையான கூலித் தொழிலாளி காணாமல் போயுள்ளார்.

யாழ் குடாநாட்டில் 40000 திற்கும் அதிகமான கடற்படை மற்றும் தரைப்படையினரும், துணை இராணுவக் குழுவினரும், 10000 திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் நிலை கொண்டுள்ளனர். குடாநாட்டின் பாதுகாப்பினைக் காரணம் காட்டி குடாநாடு முழுவதும் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவ முகாம்கள், இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திகளிலும், வீதிகளிலும் இராணுவச் சிப்பாய்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேற்படி படையினரின் எண்ணிக்கையினை விடவும் பலமடங்கு அதிகமான இராணுவப் புலனாய்வுப் பிரிவினுடைய பிரசன்னமும் இருப்பதும் வெளிப்படையாகத் தெரிந்த விடயமே.

மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசின் இராணுவ ஆக்கிரமிப்பு ஊடாக குடாநாடு முழுவதனையும் தன்னுடைய இறுக்கமான கண்காணிப்பில் வைத்திருக்கின்றது.

இவ்வாறான சூழ் நிலையில் அரசின் விருப்பத்திற்கு மாறாக, அரசுக்கு தெரியாமால், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறமுடியாத வகையிலேயே மேற்படி கடத்தல்களும் கொலைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

அது மட்டுமன்றி கடத்தல்களில் ஈடுபடும் வாகனங்கள் இலக்கத்தகடு இல்லாது தெருக்களில் பயணிப்பதாகவும் அறிய முடிகின்றது. இலக்கத் தகடில்லாத வாகனங்கள் வீதிகளில் பயணம் செய்ய முடியுமென்றால் ஸ்ரீலங்கா அரசினுடைய ஒத்துழைப்பில்லாது அவ்வாறு பயணிக்க முடியாதென்ற தவிர்க்க முடியாத முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் ஏன் மீண்டும் அதிகரிக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

1.தமிழ்த் தேசத்தில் ஸ்ரீலங்கா படைகளின் ஆக்கிரமிப்பு ஊடாக சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ்த் தேசத்தை இல்லாமல் ஆழிக்கின்ற திட்டமிட்ட செற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. அது தமிழ் தேசத்தை சிங்கள மயமாக்குவதாகும். இது சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் பொருளாதாரத்தை சிங்கள மயமாக்கல், தமிழ் மக்களது காலசாரம் பண்பாட்டை இல்லாது அழித்து சிங்கள கலாசார பண்பாடுகளை திணித்தல் போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றது.

இவற்றோடு சிங்கள இராணுவ மயப்படுத்தும் வேலைதிட்டமும் இன்னுமொரு அஙகம். இராணுவ மயப்படுத்துகின்ற வேலைத்திட்டங்களை நியாயப்படுத்துவதற்கு மேற்படி கொலை கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்களை தடுத்தல் என்ற போர்வையில் இராணுவத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பதற்கும் படையினரது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் உதவுமென அரசு நினைக்கின்றது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (04-01-2011) வெளியான ஊடகங்களில் யாழ் அரச அதிபர் கூறியதாக வெளிவந்த செய்தியில் குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் உதவி பெறப்படும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்களுடாக அரசு எதிர்பார்க்கும் உடனடிவிளைவுகளாக இருக்கக்கூடியன

• தமிழ் மக்கள் மத்தியில் மரண பயத்தை உண்டுபண்ணி கடந்த காலத் தேர்தல்களைப் போன்று எதிர் காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தமிழ் மக்கள் அக்கறைகாட்டாது ஒதுங்கி இருக்கச் செய்வதன் மூலம் தமிழ்த் தேசியத்தில் உறுதியாயுள்ள கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் எவரும் முன்வராத நிலையை உருவாக்குதலும், அத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை நிற்கக்கூடிய கட்சிகள் குறைந்தளவு வாக்குகளுடன் இலகுவாக வெல்லக் கூடிய வாய்ப்பை உருவாக்குதல்.

• இச்சம்பவங்களுக்கு முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் மீது குற்றம் சுமத்துவதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றிக் கொள்ளவும் விடுவிக்கப்பட்ட போராளிகளை தொடர்ந்தும் இராணுவத்தினரின் உச்ச கண்காணிப்பில் வைத்திருப்பதனை நியாயப்படுத்துவதற்கும், விடுவிக்கப்படாமல் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை மேலும் புனர்வாழ்வளித்தல் என்ற பெயரில் தடுத்து வைப்பதனை நியாயப்படுத்தி அவர்களை தொடர்ந்து மனிதாபிமான மற்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்தவும் அவசர காலச்சட்டத்தை தொடர்ந்து நீடித்துக் கொள்ளவும் அரசு சூழ்ச்சி செய்கின்றது.

• தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்ற அச்ச நிலையை உருவாக்கி பொருளாதார ரீதியாக தமிழர்கள் தமது தாயகத்தில் பாரிய முதலீடுகளைச் செய்து தமிழ்த் தேசத்தின் பொருளாதார ஆதிக்கத்தை தமது கைகளுக்குள் கொண்டுவரும் முயற்சிகளை தடுத்தலும் ஒரு நோக்கமாகும்.

• யாழ் குடா நாட்டில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழலை உருவாக்கி அவர்களை தாமாக மண்ணை விட்டு வெளியேறத் தூண்டுவதன் மூலம் சிங்களக் குடியேற்றங்கள் உட்பட சிங்கள மாயமாக்கலுக்கு வாய்ப்பான சூழலை உருவாக்குதல்.

• தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத சூழலைத் தோற்றுவித்து சிங்கள மயமாக்கலை தமிழ் மக்களது எதிர்ப்பு இல்லாது இலகுவாக மேற்கொள்ளுதல்.

• இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டுமென பல சர்வதேச நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றன. இந்நிலையில் போர்க் குற்றம் தொடர்பாக ஐ.நா செயலாளருக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணையொன்று இடம்பெறுமாயின் அந்த விசாரணைக்கு தமிழ் மக்கள் தமக்குத் தெரிந்த சாட்சியங்களை வழங்க முன்வராத வகையில் மரணபயத்தை உண்டு பண்ணுதல்.
இவ்வாறான நோக்கங்களை அடைந்து கொள்ளுவதற்காகவே மேற்படி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

தமிழ்ர் தாயகத்தில் இனச் சுத்திகரிப்பு தீவிரம் பெற்றுவரும் இன்றய சூழ்நிலையில் ஒவ்வொரு தமிழ் மகனுடய கடமையும் அரசின் இந்த நிகழ்சி நிரல்களுக்கு துணை போகாத வகையில் செயற்படுவதுடன் இதனை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தி எதிர்த்து தடுத்திறுத்துமாகும்.

அந்த வகையில் தமிழ் மக்களால் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அரசாங்கத்தில் சேர்ந்திருப்பதனை விலக்கிக் கொள்ள வேண்டும் அத்துடன் நல்லிணக்கம் என்ற பெயரில் அரசின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபோகும் வகையில் செயற்படுவதனையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான நிலைப்பாடாகும்.

நன்றி
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Exit mobile version