Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்.குடாநாட்டில் மட்டும் இன்னும் 44000 அகதிகள் : புலம் பெயர் அமைப்புக்கள் எங்கே?

வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் யாழ். குடாநாட்டில் 12 ஆயிரத்து 459 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 599 பேர் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்று யாழ். மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 2087 குடும்பங்களைச் சேர்ந்த 7148 பேர் இந்தியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டை இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து 15 வருடங்கள் ஆகின்றன. யாழ். குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரிடம் இருந்தது. படிப்படியாக அவை தற்போது விடுவிக்கப்பட்டுவந்தாலும் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இதனால் முழுமையான மீள்குடியமர்வு சாத்தியமாகவில்லை.தற்போது உறவினர், நண்பர்கள் வீடுகளிலும், இலங்கை, இந்திய அகதிமுகாம் களிலும் இந்த குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

புலம் பெயர்  நாடுகளிலிருந்து  தன்ன்னார்வ நிறுவனங்களும் தனி மனிதர்களும் அகதிகளுக்கு  உதவி செய்வதாகவும் அரசியல் பேசக்கூடாது என்றும்  வன்னி இனப்படுகொலை  முடிவடைந்தநாளிலிருந்தே தெரிவித்து வந்தனர்.

பல் தேசிய தன்னார்வ நிறுவனங்களோடும், இலங்கை இந்திய அரசுகளோடும் ஒப்பந்த அடிப்படையிலும், இணக்க அடிப்படையிலும்  செயற்படும் புலம் பெயர் தமிழர்கள் அகதிகளுக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

நெடுந்தீவு உதவி அரச அதிபர் பிரிவில் 124 குடும்பங்களைச் சேர்ந்த 343 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேரும், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும், காரைநகர் உதவி அரச அதிபர் பணிமனையில் 305 குடும்பங்களைச் சேர்ந்த 1,042 பேரும், யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பிரிவில் 1,318 குடும்பங்களைச் சேர்ந்த 4,442 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 405 குடும்பங்களைச் சேர்ந்த 1,726 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 409 குடும்பங்களைச் சேர்ந்த 1,445 பேரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 639 குடும்பங்களைச் சேர்ந்த 2,471 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 644 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 6 ஆயிரத்து 122 குடும்பங்களைச் சேர்ந்த 22,171 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 389 குடும்பங்களைச் சேர்ந்த 1,326 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 228 பேரும், மருதங்கேணி உதவி அரச அதிபர் பணிமனையில் 336 குடும்பங்களைச் சேர்ந்த 1,403 பேரும் மீளக் குடியமர்த்தப்படாமல் உள்ளனர்.இவர்களுடன் இங்கு பதிவுகள் ஏதுமின்றி இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

Exit mobile version