Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் குடாநாட்டின் நீரையும் நிலத்தையும் அழிப்பதற்கு கூட்டமைப்பும் துணை போகிறது

commity_meetingசுன்னாகம் அனல் மின்னிலையத்தில் ஆரம்பித்து யாழ் குடா நாடின் நீரும் நிலமும் மக்களின் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படுகின்றது. யாழ் குடநாட்டில் அழிப்பை நிறுத்துவதற்குரிய ஒரே வழி முறை நொதேர்ண்பவர் என்ற நிறுவனத்தின் மின்னுற்பத்தியை நிறுத்துவதேயாகும். அந்த நிறுவனத்தின் மின்னுற்பத்திய நிறுத்துவதாகக் கூறிய ரனில் அரசு இப்போது ஆய்வு செய்வதாகக் கூறுகிறது.

இன்று ஒரு படி கீழே சென்று குடி நீருக்கான செயலணி ஒன்றை உருவாக்கியுள்ளது. எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனத்தின் உப நிறுவனமான நொதர்ன்பவர் என்ற நிறுவனம் நடத்தும் அழிப்பை அனுமதிக்கும் அதே வேளை அதனால் பாதிக்கப்படுவோரை எப்படிக் கையாள்வது என்பதை ஆராய்வதே இச் செயலணியின் நோக்கம். நிலத்தடி நீர் அபாயத்திலிருந்து குடாநாட்டை பாதுகாப்பதற்காக மத்திய, மாகாண அரசாங்கங்கள் இணைந்து தூய குடிநீருக்கான செயலணி ஒன்றிணை உருவாக்கியிருப்பதாகக் கூறுகின்றன.

திட்டமிட்டு அழிக்கப்படும் குடாநாட்டின் இப்பிரச்சனையைக் குடி நீருக்கானதாகச் சுருக்கி மக்களுக்குக் குடி நீர் வழங்குவது எப்படி என்பதை இச் செயலணி ஆராய்கிறது.

யாழ்ப்பாணம் குடி நீருக்காக யாரிடமும் இதுவரை கையேந்தியதில்லை. வழமான விவசாய நிலங்களே குடா நாட்டின் வலிமை. நொதர்ன்பவர் என்ற நிறுவனத்தின் மின் உற்பத்தியை நிறுத்தி அந்த நிறுவனத்தை அங்கிருந்து வெளியேற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுபதற்குப் பதிலாக செயலணி என்ற பெயரில் மக்களை ஒடுக்கும் செயற்பாடு நடைபெறுகிறது.

தொடர்ந்து வடக்கின் ஒரு பகுதி மக்கள் கூட்டத்தையே அழிக்க அனுமதிக்கும் மின் வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட அனைத்து கிரிமினல்களும் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தை அழித்து அதற்குப் பதிலாக வேறு வழிகளில் குடி நீரை வழங்குவது தொடர்பாக கூட்டம் போடுகிறார்கள்.

குடி நீருக்கான செயலணியை மாகாண அரசாங்கமும் இணைந்தே உருவாக்கியுள்ளது. இன்றைய தினம் யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே குறித்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் பெற்றுக் கொடுப்பதற்கும் நீண்டகால அடிப்படையில் குடிநீருக்கான, வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்குமான பணிகளை குழு மேற்கொள்ளும் என்று கூட்டத்தில் கூறியுள்ளார்கள்.

சட்டவிரோத மின்னுற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாகவோ அதன் பின்னணியிலுள்ள கிரிமினல்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவோ இக் கூட்டத்தில் பேசப்படவில்லை.

மேலும் இன்றைய கூட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இன்றைய தினம், உருவாக்கப்பட்ட குழுவில் இணைத் தலைவர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் உபதலைவராக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் பதவி வகிக்கவுள்ளனர்.

மைத்திரிபால சிரிசேன, சம்பிக்க ரணவக்க கும்பல்கள் இணைந்து நடத்தும் அழிப்பு நடவடிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துள்ளது.

Exit mobile version