Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் குடாநாடு அவலத்தில் – இலங்கை அரசின் மர்ம மனிதர்கள் பாரிய அளவில் மக்கள் மீது தாக்குதல்..

இலங்கை அரச படைகள் செறிவாகக் காணப்படும் பகுதிகளில் கிரிஸ் பூதங்கள் என அழைக்கப்படும் மர்ம மனிதர்களின் மக்கள் மீதான குறிப்பாகப் பெண்கள் மீதான தாக்குதல்கள் இப்போது பாரிய அளவில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கை அரச படைகளின் ஆதரவுடன் நடைபெறும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே பெரும்பாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இலங்கை அரசின் இச் சமூகவிரோதச் செயற்பாட்டின் அரசியல் பின்னணி குறித்த பல வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கபடுகின்றன.
இவர்கள் மக்களைத் தாக்கிவிட்டு ஓடி மறையும் இராணுவ முகாம்களுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். மக்களை வழிநடத்தி போராட்டத்தை வளர்த்தெடுக்க அரசியல் தலைமை எதுவும் இல்லை என்பது பலரும் தெரிவிக்கும் கருத்தாகும்.
நேற்று யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதும் இம் மர்ம மனிதர்களின் அடாவடித் தனத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசு குடா நாட்ட்டை அவலத்திற்கு உள்ளாக்கியிருந்தது.
கடந்த சில நாள்களாக ஆங்காங்கே இடம்பெற்று வந்த சந்தேகத்துக்கிடமானவர்களின் நடமாட்டம் நேற்று இரவு கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. நகரப் பகுதி முதல் கிராமப்புறங்கள் வரை பரவலாகப் பல இடங்களிலும் இவர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாகவும் இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றமான நிலை ஏற்பட்டதாகவும் செய்தியாளர்களும் மக்களும் தெரிவித்தனர்.பதற்றமான நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதிகளில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு வீடுகளில் ஐந்து, ஆறு குடும்பங்களாகச் சேர்ந்து இருந்தனர். பெண்கள் வீடுகளுக்குள் இவ்வாறு இருக்க ஆண்கள் வீடுகளுக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை அரச பயங்கரவாதத்தை சர்வதேச அளவில் எதிர்கொள்ளும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதும் அவலத்தில் வாழும் மக்களுக்கு ஆதரவளிப்பதும் ஒவ்வொருவரதும் கடமை.

Exit mobile version