Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணப் பல்கலைகழக ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்

இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நடத்தி வருகின்ற தொழிற்சங்கப் போராட்டத்தையடுத்து, திடீரென இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை அரசாங்கம் வியாழனன்று திறந்திருந்தது. எனினும் ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சமூகமளிக்கவில்லை.

இதன் காரணமாக அங்கு கல்விச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை.

அரசாங்க அறிவிப்பையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்திற்கு விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களே வருகை தந்திருந்ததாக அந்தப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் தெரிவித்தார்.

பல்கலைக்கழக அலுவலகங்கள் செயற்பட்ட போதிலும் விரிவுரையாளர்கள் எவரும் வருகை தரவில்லை. இதனால் பல்கலைக்கழகம் வெறிச்சோடிக் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தானே மூடிய பல்கலைக்கழகங்களை அரசாங்கம் இன்று திறந்தபோதிலும், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள தமது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகப் விரிவுரையாளர்கள் எவரும் கடமைக்குத் திரும்பவில்லை என பல்கலைக்கழக ஆசியர் சங்க சம்மேளனத்தின் பொருளாளர் பவித்ரா கைலாசபதி தெரிவித்தார்.

நிதியமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தலைமையில் உயர் மட்டச் சந்திப்பு ஒன்று புதன்கிழமை நடைபெற்ற போதிலும், அந்தச் சந்திப்பிலும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும், இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்வதாகவும் பவித்ரா கைலாசபதி கூறினார்.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமும், பல்கலைக்கழகங்களைப் பாதூக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தாங்கள் முன்னெடுத்துள்ள பத்து லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வேலைத்திட்டமும் நடைபெறவிருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அறிவித்திருக்கின்றது.

Exit mobile version