பிரித்தானிய அரசியலில் மட்டுமல்ல இலங்கை அரசியலிலும் அதிகாரத் தரகராகச் செயற்படும் நிர்ஜ் தேவா என்ற ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் (MEP) சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மின்சாரம் வழங்கும் தனியார் நிறுவனமான mtd walkers plc இன் இயக்குனர்களில் ஒருவரான இவர் பிரித்தானிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராவார்.
வெளி நாட்டு அபிவிருத்திக்கான கொன்சர்வேட்டிவ் கட்சியின் பேச்சாளரான இவர், பல்தேசிய நிறுவனங்களில் அறியப்பட்ட தரகர்களில் ஒருவர். பில்கேட்ஸ் அறக்கட்டளை வறிய நாடுகளின் மக்களை மருந்துகளைப் பரிசோதிப்பதற்கன எலிகள் போன்று பயன்படுத்துகிறது. மூன்றாம் உலக நாடுகளில் பில்கேட்ஸ் அறக்கட்டளையை அறிமுகப்படுத்தி ஆதரிப்பவர்களில் நிர்ஜ் தேவா முக்கிய புள்ளி.
சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் ipp power என்ற முறையில் பெற்றோலியக் கழிவு எண்ணைகளின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்றது. சிறிய அளவிலான மின்னுற்பத்திக்கே பொருத்தமான இந்த முறையினூடாக உற்பத்தி செய்யப்படும் யாழ் குடா நாட்டின் மின்னுற்பத்தி பெரும் தொகையான கழிவுகளை விட்டுச் செல்கிறது. இக் கழிவுகளை உரிய முறையில் வெளியேற்ற பெரும் தொகைப் பணம் செலவாகும் என்பதால், உற்பத்தியில் ஈடுபடும் பல்தேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ், மக்கள் பயன்படுத்தும் நிலப்பகுதிகளில் அவற்றை வெளியேற்றுகிறது. ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பான யாழ் குடா நாட்டுப் பகுதியில் மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்திய வரலாறு கிடையாது.
சுத்தமான நீரைக் கொண்ட யாழ்ப்பாண மண்ணின் நீரை சுன்னாகம் மின்னுற்பத்தில் நிலையத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் நச்சாக்கி வருகின்றன. சுன்னாகம், ஏழாலை, கோப்பாய் போன்ற பகுதிகளில் நீர் அசுத்தமடைந்ததால் மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருப்பதாக வாக்குப் பொறுக்கும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. மக்கள் போராடத் தயாரானாலும் அவர்களை முடக்குவதே அரசியல் கட்சிகளின் தொழில் என்பது வேறுவிடயம்.
இக் கழிவுகள் யாழ் குடாநாட்டின் நீர் வளத்தையும் விவசாயத்தையும் அடியோடு அழிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சுற்றுச் சூழலை நச்சாக்கும் கிரிமினல் வேலையில் ஈடுபட்டிருக்கும் எம்.ரி.டி வோக்கேஸ் என்ற மலேசிய நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக நிர்ஜ் தேவா பதவி வகிக்கிறார். பிரித்தானியாவிலிருந்து ஈழம் பிடிக்கிறோம் என்று கூச்சலிடும் தமிழர் தலைமைகள் நிர்ஜ் தேவாவின் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் குற்றச் செயலுக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்குத் தாக்கல் செய்ய அத்தனை வாய்ப்புக்களும் உண்டு. யாழ்ப்பாணத்திற்குச் சென்று எம்.ஜீ.ஆர் பாணியில் படம் காட்டிய டேவிட் கமரனை விழுந்து வணங்கிய தமிழர் தலைமைகள் அவரது கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் ஊடாக அழிப்பு நடக்கும் போது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் பணம் திரட்டவும் அதிகாரம் செலுத்தவும் அலையும் இந்த அமைப்புக்கள் ஈழத்தின் ஒரு பகுதி அழிக்கப்படும் போது வாழவிருப்பதன் நோக்கம் சந்தேகத்திற்குரியது.
மேலதிக விபரங்கள்:
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரித்தானியத் தலையீடு:வெளிவராத உண்மைகள்
யாழ்ப்பாணத்தில் அகதிகளாக்கப்படும் மக்கள் : பண வெறியும் பாசிசமும்