Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணத்தில் நீர் நச்சடைவதன் பின்னணியில்

வேதாந்தாவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ராஜபக்ச
வேதாந்தாவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ராஜபக்ச

வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனினதும் அவரது குருவானவரான பிராமானந்தா என்ற பாலியல் சுவாமிகளது துணையால் எல்லாம் சிவமயமாகத் திகழ்வதாக விக்னேஸ்வரன் தென்னிந்தியாவில் கூறினார். புலிகள் இருக்கிறார்களா இல்லையா என்ற ஆய்வில் புலம்பெயர் அரசியல் தலைமகளும், ராஜபக்ச பாசிஸ்டுக்களும்  ஈடுபட்டிருக்கும் போது, ஏழாலை சுன்னாகம் ஆகியபகுதிகளில் நச்சு நீரை அருந்தும் நிலைக்கு மக்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதி மக்கள் குடிப்பதற்கான சுத்தமான நீர் வசதிகள் அற்று அல்லற் படுவதாகவும் சில குடும்பங்கள் தமது உறவினர்களின் வீடுகளிற்கு இடம் பெயர்வதாகவும் அறிய முடிகின்றது. எண்ணெய்ப் படலமானது நிலத்தடி நீரில் மிக வேகமாகப் பரவி வருவதாகவும் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் எண்ணெய் கலந்த நீரினை உட்கொண்டதனால் பல்வேறு நோய்களிற்கு ஆளாகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது. இவ் அனர்த்தத்தினால் நேரடியாக 600 குடும்பங்களைச் சார்ந்த 3000 பொதுமக்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் கோப்பாய் பகுதியில் சில கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள் வர ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்கான காரணம் சுன்னாகத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்கு உரித்தான இயந்திரங்களிலிருந்து வெளியேறும் கழிவுகளே காரணம் என்றும் செய்திகள் வெளியாகின.
இரண்டு இயந்திரங்களிலிருந்து வெளியேறும் கழிவுகளால் மட்டும் நீர் நச்சடைந்துள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

வேதாந்தா என்ற பல்தேசிய நிறுவனம் மன்னார் கடற்படுக்கையில் எண்ணை அகழ்வில் ஈடுபட்டுவருவது தெரிந்ததே. வேதாந்தா நிறுவனத்தின் கனிமக் கொள்ளையால் சாம்பியாவின் இயற்கை வழங்கள் கட்டாந்தரையாக்கப்பட்டமையும், மத்திய இந்தியாவில் தண்டக்காரண்யா காடுகள் நாசமாக்கப்படுவதும் பல அமைப்புக்களால் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
எண்ணை அகழ்வில் இதுவரை ஈடுபட்டிராத வேதாந்தாவின் பரிசோதனைக் கூடமே மன்னார் கடற்படுக்கை. இவ்வாறான விசப் பரீட்சைகளை நடத்துவதற்கு பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்ட வேதாந்தாவிற்கு மிகப்பொருத்தமான இடம் இலங்கை. ஒருபுறத்தில் இலங்கை அரசை போர்க்குற்றங்களைக் காட்டி மிரட்டிப் பணிய வைக்க, மறு புறத்தில் அதற்கான பிரதி உபகாரமாக முழு இலங்கையையும் ஒட்டச்சுரண்டும் தொழிலில் ஏகாதிபத்தியங்கள் ஈடுபடுகின்றன.

பிரித்தானியா போன்ற நாடுகளையும் அவற்றின் எஜமானர்களான பல்தேசிய வர்த்தக நிறுவனங்களையும் நம்பியே தமது வாக்குப் பொறுக்கும் அரசியலை நடத்தும் தேசியக் கூட்டமைப்பு இவை குறித்துக் கண்ணை மூடிக்கொண்டிருப்பதில் வியப்பில்லை.

செப்டெம்பர் மாதம் 14ம் திகதி 2014 இல் வேதாந்தாவின் வருடாந்த அறிக்கையில் இலங்கையில் தனது நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெறுவதாக வேதாந்தா அறிவித்துள்ளது/

ஆக, கடலுக்கு அடியில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கான செலவினங்கள் எதுவுமின்றி வேதாந்தா நடத்தும் எண்ணைக் கொள்ளைனால் குடாநாட்டின் நீர் நச்சடைகிறதா என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன. வேதாந்தாவின் நடவடிக்கைகள் தொடர்பாகக் கேள்வியெழுப்பவும் கண்காணிக்கவும் கோரிக்கை விட தமிழ்த் தலைமைகளோ, இலங்கை தழுவிய அமைப்புக்களோ அற்றுப்போயுள்ள சூழலில் கொள்ளை தங்குதடையின்றி நடைபெறுகிறது.

Exit mobile version