அரசியல் சட்டத்தையோ அமைச்சரவைத் தீர்மானத்தையோ அங்கீகரிக்க முடியாத நாடாக இலங்கை உள்ளது. தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் தமிழில் பாடலாம் என அரசாங்கம் கூறியது. அரசியல் சட்டத்தில் தேசிய கீதம் தமிழில் பாடலாமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நூற்றுக்கு நூறுவீதம் தமிழர்கள் வாழ்கின்ற யாழ்ப்பாணத்தில் நாட்டின் இரண்டாவது இடத்திலுள்ள பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்படியானால் அரசியல் சட்டத்தையோ அமைச்சரவைத் தீர்மானத்தையோ அங்கீகரிக்காத நாடாகவே இலங்கை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் பாடப்படுவது எனும் பிரச்சினை எழுந்த போது இந்தியாவிலும் ஒரு மொழியில்தான் பாடப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் எந்த மொழியில் பாடப்படுகின்றது. இந்தியாவில் வங்காள மொழியான சிறுபான்மை மொழியில் தான் அது பாடப்படுகின்றது. சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுபான்மை மொழியான தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வேண்டுமென எந்த அமைச்சராவது துணிந்து கூறமாட்டார்கள். அதனால் தான் தமிழில் பாடலாமென அமைச்சரவை தீர்மானமெடுத்தது. ஆனால் அமைச்சரவை தீர்மானத்தையோ அரசியல் சட்டத்தையோ அங்கீகரிக்க முடியாத நாடாக இலங்கை உள்ளது.
எந்த அபிவிருத்தியாலும் நிரந்தர சமாதானத்தை இந்த நாட்டில் கண்டுகொள்ள முடியாது. அபிவிருத்தி மனித உரிமை அபிவிருத்தியால் முடியுமாக இருந்தால் எப்பவோ தந்தை செல்வா காலத்தில் சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
தமிழ் பேசுகின்ற மக்களது அபிலாஷைகள் எப்போது தீர்க்கப்படுகின்றதோ அன்றுதான் இந்த நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வரமுடியும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் புரையோடிப் போன இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை அரசு உணர வேண்டும்.
அபிவிருத்தி என்றால் வெறும் கட்டிடங்களை மாத்திரம் கட்டினால் அபிவிருத்தி ஆகாது. 6 வருடமாகியும் கடற்கோளால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்கள் 480 இற்கும் மேற்பட்டோர் வீடு அற்றுள்ளனர். இந்த நாட்டில் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றவர்கள் என்றால் அவர்கள் எந்தக் காற்றைச் சுவாசிக்கின்றார்கள்.
அபிவிருத்தி வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெகிழ்வுத் தன்மையைக் காட்டியுள்ளது. அரசு பச்சைக் கொடி காட்டாவிட்டால் எமது முடிவை நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதும் அரசுக்குத் தெரியும்.
இந்த அரசினால் நிர்வாக சேவைக்குத் தேர்வு செய்யப்பட்டோரில் எத்தனை பேர் தமிழ், முஸ்லிம்கள் எனக் கேட்கிறோம். மட்டக்களப்பில் 21 சிற்×ழியர் நியமனத்தில் 17 பேர் பெரும்பான்மையினத்தவர்கள். படிப்படியாக இவர்களை இடமாற்றம் செய்வதாகவும் நிர்வாக சேவைக்கு ஆட்சேர்க்க விசேடமாகத் தமிழ் இளைஞர்களுக்கு 2011 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பரீட்சை நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
அபிவிருத்தி இடம்பெற வேண்டும். தமிழ்பேசும் பகுதியில் அவர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய விதத்தில் அபிவிருத்தி நடைபெற வேண்டுமெனவும் தெரிவித்தார்.