நேற்றும் 30 மாணவர்களை பஸ் ஒன்றில் கடத்தி அதில் 28 பேரை ஓமந்தையில் வைத்து விடுதலை செய்து விட்டு ஏனைய இருவரை கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பான முறைப்பாடு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ளது.
இதேபோன்று எத்தனையோ சம்பவங்கள் தமிழ் மக்களை குறி வைத்து வடக்கில் இடம்பெறுகின்றது. பட்டப்பகலிலும் சம்பவங்கள் நடக்கும் போது அங்கு குவிக்கப்பட்டுள்ள இராணுவம் பொலிஸாரும் என்ன செய்கின்றனர் என்ற சந்தேகம் எழும்புகின்றது.
யாழ். குடாநாட்டைப் பொறுத்த வரையில், நூறு மீற்றருக்கு ஒரு இராணுவ முகாமோ அல்லது பொலிஸ் நிலையமோ உள்ளது. 50 ஆயிரத்திற்கு அதிகமான இராணுவம் 5 ஆயிரத்திற்கு அதிகமான பொலிஸாரும் யாழில் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. அப்படியானால் அங்கு எவ்வாறு கடத்தல், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் இடம்பெற முடியும்.
எனவே இங்கு இடம்பெறுகின்ற சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கத்தின் பயங்கரவாதமே உள்ளது. படையினரை தவிர வேறு ஒரு ஆயுதக் குழுவும் வடக்கில் இல்லை. தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் நபர்களை அரசு குறிவைக்கத் தொடங்கியுள்ளது.
தேசிய கீதத்தை சிங்களத்தில் மாத்திரம் பாட வேண்டும் எனக் கூறி சிறுபான்மை இனங்களின் இதயங்களில் பிரிவினைவாதத்தை அரசாங்கம் தோற்றுவிக்கின்றது. இது அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகிறது.
மொழிப் பிரச்சினையில் ஆரம்பமான 30 ஆண்டு கால யுத்தம் மீண்டும் தேசிய கீதத்தின் ஊடாக உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முகாம்களிலும் சிறைகளிலும் தமிழர்களை வைத்து அவர்களை வதைத்து போராட்டங்களுக்கு அரசாங்கம் தூண்டுகின்றது. எனவே சிங்கள மக்கள் இனிமேலும் போராட்டம் ஒன்றுக்கு இடமளிக்கக் கூடாது. இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க அணி திரள வேண்டும் என உரையாற்றிய மருதானையில் அமைந்துள்ள சீ.எஸ். ஆர். மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில நாம் இலங்கையர் அமைப்பின் இணைப்பாளர் உதுல் பிரேமரத்தின கூறினார்.