யார் அரவானி என்ற கேள்வி பல ஆண்டுகளாகவே சந்தேகம் மிக்க ஒன்றாக மக்கள் மத்தியில் இருந்து வந்தாலும், சென்னையில் ஒருவர் கடத்தப்பட்டு அரவானியாக மாற்றப்பட்டார் என்ற செய்தி இன்னும் கூடுதலான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. காட்சி ஊடகங்களுக்குச் சொல்லவே வேண்டாம். தினமும் தொலைக்காட்சிகளில் இது தொடர்பான சிறப்புச் செய்திகள், தொகுப்புகள், ஒளிபரப்புகள், நிகழ்ச்சிகள் என கொஞ்சமும் பஞ்சமே இல்லை. ஆனால், அவற்றில் கூறப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் விளிம்புநிலையில் வாழ்ந்து வரும் அரவானிகளைப் பற்றிய தவறான அர்த்தங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் கற்பிப்பவையாக இருக்கின்றன. மனித குலத் தோன்றலின் போதே ஆணுமில்லாமல், பெண்ணுமில்லாமல் வாழ்ந்து வரும் மனிதப் பிறவிகள்தான் அரவானிகள். ஆனால், கண்டிப்பாக பரம்பரையுமில்லை; மாறுவதோ- மாற்றப்படுவதோ இல்லை. அதாவது, கரு உருவாகும்போதே எக்ஸ்-ஒய் குரோமோசோம்களின் சேர்க்கை விகிதத்தில் ஏற்படும் மாற்றம்தான் “அரவானி’. இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான அரவானிகள் உடலமைப்பில் ஆண் குழந்தைகளாகப் பிறந்துதான் அரவானிகளாகின்றனர். வெளிநாடுகளில் கணிசமான பெண்கள், தங்களுக்குள் ஆண் தன்மையை உணர்ந்து அரவானிகளாகவும் மாறுகின்றனர். இன்னும் மிகக் குறைவான எண்ணிக்கையில், இரு பால் உறுப்புகளையும் கொண்ட குழந்தைகளும் பிறந்து பிறகு, விருப்பத்திற்கேற்ப ஆணுறுப்பை அகற்றிவிட்ட அரவானிகளும் உண்டு. குறிப்பாக, வளர்இளம் பருவத்தில் பெண் தன்மையை உணர்ந்து ஒரு கட்டத்தில் அரவானியாகவே முழுமை பெறுகின்றனர். அவ்வாறு முழுமை பெறுவது என்பதுதான் “அறுவைச் சிகிச்சை’ செய்துகொள்ளும் நிலை. அரவானிகள் சமூகத்திடையே ஜாதி, மதம், மொழி எதுவுமில்லை. இந்தச் சிக்கல்களுக்குள் சிக்காத ஒரு சமூகத்தை நாமெல்லாமும் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இவர்களை அரவானி என்றழைப்பது சரிதானா? என்ற கேள்வியே நீண்ட நாளாக விவாதத்துக்குள்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. இப்போது அரசு “திருநங்கைகள்’ என்றழைக்க அறிவுறுத்தியுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பெரிய தொண்டு நிறுவனமான தாய்-விஎச்எஸ், “அரவானிப் பெண்கள்’ என்றழைக்கிறது. பிறப்பிலேயே அரவானிகளாகப் பிறந்து காலப்போக்கில், மனத்தால், நடவடிக்கையால் அரவானிகளாக உணர்ந்து முழுமையாக மாறுகின்றனர் என்பதில் இதுவரை எந்த மாறுபட்ட மருத்துவக் கருத்துகளும் வரவில்லை. இப்போது பிரச்னை என்ன? இளைஞர்களைக் கடத்தி அரவானிகளாக மாற்றுகிறார்கள் என்பது மட்டுமே. அவ்வாறு செய்ய முடியுமா? என்பதை நமக்குள்ளாகவே கேட்டுப் பார்த்தால் விடை கிடைத்துவிடும். ஆணுறுப்பை அகற்றி விடுவதால் மட்டுமே அவர் அரவானியா? அதற்கு வாய்ப்பே இல்லை. ஆண் உறுப்பை இழந்தால் அது ஓர் உடலியல் குறையாகத்தான் இருக்குமே ஒழிய, எப்படி அரவானியாக முடியும்? எனவே, மருத்துவ ரீதியாக எந்த விஷயத்தையும் அணுகாமல், பொத்தாம்பொதுவில் சில தவறான விளக்கங்களைக் கொடுக்கும் (பரப்பும்) நிலையில் இருந்து ஊடகங்கள் மாற வேண்டும். கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் இந்தச் செயலால், ஏற்கெனவே அரவானி என்றால் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்த நம் மக்களுக்கு இன்னும் கூடுதலான “ஊக்கமருந்து’ சாப்பிட்ட நிலை ஏற்பட்டுவிடும். அரவானிகள் மீதான “ஒதுக்குதல்’ இன்னமும் பல மடங்கு அதிகரித்து விடவும் வாய்ப்புள்ளது. அவர்களையும் இயல்பான மனிதர்கள்தான் என்ற பாலின சமத்துவக் கருத்தாக்கத்தை உருவாக்கும் முயற்சியில் கடுமையான பின்னடைவு ஏற்படும். எனவே, அரவானிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவாகிறார்கள்? அவர்களின் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது? என்பது குறித்த மருத்துவ ரீதியான பயிற்சி காவல் துறை, நீதித் துறை உயர் அலுவலர்களுக்கு அவசியம் அளிக்கப்பட வேண்டும் – ஊடகத் துறையினருக்கும்கூட.
Thanks:Dinamani.