Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோதல்கள் நடைபெறும் பகுதியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்வு: ஐக்கிய நாடுகள் சபை.

மோதல்கள் நடைபெறும் இலங்கையின் வடபகுதியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதிவுசெய்துகொள்ளப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குப் புதியவரவுகள் மாத்திரமன்றி, நாளாந்தம் இடம்பெயர்ந்து வருபவர்கள் குறித்த சரியான தரவுகள் கிடைக்காமையும் ஒரு காரணம் என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் மேலும் 50,000 பேர் சிக்குண்டிருக்கலாமென மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் எதிர்பார்த்திருப்பதுடன், அவர்கள் போதியளவு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் இன்றி பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

இடம்பெயர்ந்திருக்கும் 250,000ற்கும் அதிகமான மக்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கான உணவு, நீர், சுகாதார சேவகைள், தற்காலிக கூடாரங்கள், போசாக்குணவுகள், பாதுகாப்பு போன்றவற்றை வழங்குவதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவையென இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் நேற்றுமுன்தினம் கோரிக்கை விடுத்திருந்தன.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதால் அவர்களுக்கான மனிதநேயத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பெருமளவிலான உதவிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கும் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம், மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளிலுள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றவேண்டிய அவசரநிலை தோன்றியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், மோதல் பகுதிகளிலுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு 30 மெற்றிக்தொன் உணவுப் பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன. இதில் 5 மெற்றிக்தொன் உடனடி உணவுப் பொருள்களும், 25 மெற்றிக்தொன் உணவு நிவாரணப் பொருள்களும் உள்ளடங்குவதாகத் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version