Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள அமைச்சரவை உபகுழு.

இலங்கையில் தொடரும் மோதல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாழ்வதற்கு இலங்கை அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது.

சர்வதேச ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவால் மாத்திரம் சமாளிக்கமுடியாது எனக் கூறியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது.

அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, ரோகித்த போகல்லாகம, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா, சரத் அனுமுகம, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இந்த அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிக்கின்றனர். இம்மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் இந்தியாவின் அரசியல் சூழ்நிலையில் இலங்கைக்குச் சாதகமாக முடிவுகள் ஏற்படும் என அமைச்சரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் இந்த உபகுழு ஆராய்ந்து அரசாங்கத்துக்கு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பித்தபோது வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம சமூகமளித்திராமை குறித்து ஜனாதிபதி தனது கோபத்தை வெளிக்காட்டியதாகவும் அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாமதப்படுத்தாது உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமூகமளித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளை விளக்கிக் கூறுமாறு ஜனாதிபதி, ரோகித்த போகல்லாகமவைப் பணித்துள்ளார்.

அதன் பின்னர் ஆரம்பமான அமைச்சரவைக் கூட்டத்தில் பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்தும், சீனா, ரஷ்யா, வியட்னாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து கிடைத்திருக்கும் ஒத்துழைப்புக்கள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர், அமைச்சரவையில் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகள் மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்தவில்லையெனவும், விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்கும் மனிதநேய நடவடிக்கைகளையே அவர்கள் முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சர் ரோகித்த போகல்லாகம அமைச்சரவைக்குக் கூறினார்.

Exit mobile version