Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோதல்களில் இதுவரை 11,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்: இராணுவத் தளபதி

14.09.2008.

2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாவிலாறு அணை மூடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதல்களில் இதுவரை 11,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதில் லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இராணுவத் தலைமையத்தில் நடைபெற்ற மேஜர் ஜென்ரல் அதிகாரிகளின் பதவியுயர்வு வைபத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளை மீட்பதற்கு நான்கு முனைகளால் அரசாங்கப் படைகள் முன்னேறிவருவதாகவும், ஒரு முனையில் பூநகரியிலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவிலேயே இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், ஏனைய முனைகள் பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கவில்லை.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் படி விடுதலைப் பலிகள் அமைப்பில் 4000 பேரே எஞ்சியிருப்பதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டார். வன்னியின் மேற்குப் பகுதியில் 30 கிலோமீற்றர் தூரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் யாழ்ப்பாணத்துக்கும், தென்பகுதிக்கும் இடையிலான தரைவழிப் பாதையத் திறக்கமுடியும் என இராணுவத் தளபதி கூறினார். 
மோதல்கள் இடம்பெறும் சூழ்நிலையில் ஊடகங்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புத் தொடர்பாகவும் இராணுவத் தளபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்ததுடன், ஊடகங்கள் எதனை வெளியிடவேண்டும், எதனை வெளியிடக்கூடாது என்பதை நன்கு உணர்ந்து செயற்படவேண்டும் எனக் கூறினார்.
இதேவேளை, வன்னியில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 700 பேர் கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Exit mobile version