சட்ட வழமைகளுக்கு மாறாக இந்திய பல்தேசிய வியாபார நிறுவனமான டாடா உடன் இலங்கை அரசாங்கம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் கிரிமினல்களதும் பல்தேசியக் கொள்ளயர்களதும் சட்டவிரோதத் தங்குமடமாக மாறிவரும் கொழும்பும் புறநகர்ப்பகுதிகள் கிரிமினல் கோத்தாபாயவின் கட்டுபாட்டினுள் உள்ளது. கோத்தாபாயவின் கட்டுப்பாட்டிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை டாடா நிறுவனத்திற்கு கொழும்பின் இருதயப் பகுதியை 99 வருடங்களுக்கு பணம்பெற்றுக்கொள்ளாத குத்தகைக்கு விட்டுள்ளது.
நாட்டின் தலைநகரத்தின் ஒரு பகுதியை 99 வருடங்களுக்குத் பல்தேசிய நிறுவனம் ஒன்றிற்குத் தாரைவார்த்துக் கொடுப்பது இதுவரை உலகத்தின் எந்த நாட்டிலும் நடைபெற்றதில்லை.
சிலேவ் அயலன்ட் என்ற கொழும்புக் கோட்டைக்குத் தெற்குப் பகுதியிலுள்ள நிலப்பரப்பில் 8 ஏக்கர் மக்கள் குடியிருப்புப் பகுதி டாட்டா நிறுவனத்திற்கு 99 வருடங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. இப்பகுதியில் 430 மில்லியன் டொலர் செலவில் டாட்டா நிறுவனம் ஆடம்பரவசதியுள்ள குடியிருப்புப் பகுதிகளையும், பல்பொருள் அங்காடிகளையும், நட்சத்திர விடுதிகளையும் கொண்ட பல்தேசியப் பணக்கொள்ளையர்களுக்கான நகரம் ஒன்றை அமைக்கவுள்ளது.
மக்கள் குடியிருப்புப் பகுதியான சிலேவ் அயலண்டில் ஆயிரக் கணக்கான குடும்பங்களை வெளியேற்றி நடைபெறவிருக்கும் இந்த நிலப்பறிப்பில் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக சிலேவ் அயலண்ட் போலிஸ் பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு 8 ஏக்கரில் 3 ஏக்கரில் தற்காலிகமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அரசாங்கம் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது.
இவ்வாறான வாக்குறுதிகளின் ஊடாக குடியிருப்பு நிலங்கள் அபகரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமல்ல சிங்களப் பகுதிகளிலும் தெருக்களில் விடப்பட்டுள்ளனர்.
போர்க்காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தேவைக்கும் அதிகமான இராணுவத்தின் குடியிருப்புப் பகுதியாகவும், இராணுவ தலைமைப் பகுதியாகவும் திருகோணமலையையும் யாழ்ப்பாணத்தையும் மாற்றிவிட்டுகொழும்பையும் அதன் புறநகர்ப்பகுதிகளையும் உல்லாசப் பயணிகளதும், பல்தேசியக் கொள்ளையர்களதும் சொர்க்கபுரியாக மாற்றுவதே இலங்கை அரசின் திட்டம்.
இந்திய அரச பங்கரவாதியான நரேந்திர மோடியை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக பணத்தை வாரியிறைத்த டாட்ட நிறுவனத்துடனான இந்த ஒப்பந்ததைப் போன்று ஹம்பாந்தோட்டைப் பகுதியில் ஆதித்தியா பிர்லா நிறுவனத்திற்கு 400 ஏக்கர் காணியைத் தாரைவார்க்கும் ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது.
இலங்கையில் அபிவிருத்தி நடந்தால் எல்லாம் வழமைக்கு வந்துவிடும் என்று டக்ளஸ் தேவாந்தா உட்பட அனைத்து தமிழ் அரச துணைக்குழுக்களும் பிரச்சாரம் செய்துவருவதன் பின்னால் உள்ள அரசியல் பயங்கரவாதம் இதுவே.
இதற்கு முதல் பிரதிபலனாகவே ராஜபக்ச சார்க் நாடுகள் என்ற போர்வையில் இந்தியாவிற்கு அழைத்துக் கௌரவிக்கப்படுகிறார். டாட்டா போன்ற பல்தேசிய நிறுவனங்களின் செல்லக் குழந்தைகளான தமிழின வாதிகள் இவற்றை அறியாதவர்கள் போல நாடகமாடுகிறகள்.
இலங்கையை கொள்ளையடிக்கவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவும் தடைவித்தித்து டாட்ட நிறுவனத்தின் தமிழ் நாட்டுக் கிளைகளை மூடும் போராட்டத்தில் இவர்களை ஈடுபடக் கேட்டுப்பாருங்கள்! தலைமறைவாகிவிடுவார்கள்!!
போராட்டம் என்பது மக்களை உணர்ச்சிவயப்படுத்தி அவ்வப்போது பிழைப்பு நடத்திக்கொள்வதல்ல. அடிப்படைப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதும் அதனை மக்கள்சார்ந்த அரசியல் தளத்தில் போராட்டமாக முன்னெடுப்பதுமே ஆகும்.
தெற்காசிய நாடுகளை பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கொள்ளக் களமாக முழுமையாக மாற்றும் நோக்கத்துடனேயே நரேந்திர மோடி, மகிந்த ராஜபக்ச போன்ற துறைசார் கொலைகாரர்கள் ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள்.
இவர்கள் முன்வைக்கும் இனவாதம், மதவாதம், தேசப்பற்றுப் போன்றன மக்களைத் திசைதிருப்புவதற்காகவே தவிர வேறொன்றுமில்லை.