தமிழின விரோதியும் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதானியுமான சுப்பிரமணியன்
சுவாமி இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றும் 13 வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 13வது திருத்தச்சட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாகவே பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்கிறார். தவிர, நரேந்திர மோடியும் மகிந்த ராஜபக்சவிடம் இதே கருத்தை வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.
அதே வேளை இலங்கையில் வாழும் மக்களுக்கு அதிகாரத்தை எந்த வகையில் பகிர்ந்தளிப்பது என்பது குறித்து கட்டளையிட, இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ உரிமையில்லை என மகிந்த ராஜபக்சவின் அமைச்சர் நிமால் சிரிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
13 வது திருத்தச்சட்டத்தை மையப்படுத்திய நாடகம் ஒன்று கட்டமைக்கப்படுவதை இது உணர்த்துகிறது.
மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு அழைத்துக் கௌரவிக்கப்பட்டதற்கான காரணங்கள் தெளிவானவை. இந்திய செய்தி நிறுவனமும் அரச தரப்புக்களும் இச்செய்தியை வெளியிட்டிருந்தன. இதுவரை நரேந்திர மோடியின் ஊது குழல்களாக வளர்க்கப்பட்ட இந்திய ஊடகங்களும், பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வியாபாரம் நடத்தும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களுமே இவற்றை மறைக்கின்றன.
நரேந்திர மோடியைச் சந்தித்த மறு நாள் இந்திய இலங்கைக் கூட்டுத் திட்டத்தில் உருவாகும் சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரையும், செயலாளரையும் உத்தரவிட்டதாக இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதற்கு முன்பதாக டாட்டா நிறுவனத்திற்கு கொழும்பு நகரத்தின் மையப்பகுதி 99 வருடங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.
ஆக, பல்தேசிய நிறுவனங்களின் தலையாட்டிப் பொம்மையான நரேந்திர மோடி என்ற பாசிஸ்ட் இன் இலங்கை மீதான அக்கறை என்பது 13 வது திருத்தச்சட்டம் சார்ந்ததோ அன்றி தமிழ் பேசும் மக்கள் மீதான அக்கறையின் பால்ப்பட்டதோ அல்ல. புதிய உலக ஒழுங்குமுறையின் தெற்காசியப் பிரசவங்களான மோடியும் ராஜபக்சவும் அடிப்படை முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களைக் கூட ஏற்றுக்கொள்ளாதவர்கள்.