மோடி ஏதோ ஜனநாயக வாதி போன்றும், ராஜபக்சவை அழைத்தது மோடியைக் கறைப்படுத்தும் என்ற வகையிலும் இனவாதிகள் கூச்சலிடுவது தான் அருவருப்பானது. தற்செயலாக, தந்திரோபாயக் அடிப்படையில் ராஜபக்சவை மோடி அழைக்காமலிருந்திருந்தால் மோடியின் கால்களில் விழுந்து வணங்கி ஆயிரம் பாபர் மசூதிகளை இடித்துத் தள்ளியிருப்பார்கள் இந்த தமிழினவாதிகள். ஏற்கனவே மோடியை எந்தக் கூச்சமுமின்றி ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் பெயரைப் பயனபடுத்தி ஆதரித்து இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்படும் மக்களை ஈழப் போராட்டத்தின் எதிரியாக்கிக் காட்டியவர் வை.கோ.! எமது நண்பர்களான ஒடுக்கப்படும் உலக மக்களை எதிரிகளாக்கி ராஜபக்ச மோடி போன்ற தொழில் சார் கொலைகாரர்களை பலப்படுத்தும் சுயநலவாதிகளாக தமிழினவாதிகள் தம்மை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மோடியையும் ராஜபக்சவையும் எதிர்க்கும் ஜனநாயக வாதிகளாக தம்மை வெளிக்காட்டி தமிழ்ப்பேசும் மக்களைப் பலப்படுத்த குறுகிய பிழைப்புவாத நோக்கம் கொண்ட இனவாதிகள் விரும்பவில்லை.
மறுபுறத்தில் தமிழக மக்களைச் ஒடுக்கி, ஊழல்பணத்தில் ஊதாரித்தனமாக வாழும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அடிப்படையிலேயே சுய நிர்ணைய உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரானவர்கள். மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார் என தமிழின வாதிகள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். தற்செயலாக வாக்குப் பொறுக்கும் நோக்கத்தோடு விழாவில் ஜெயலலிதா பங்கேற்காவிட்டால் அவரைத் தெய்வமாக்கி போராடும் மக்களின் ‘துரோகிகளாக’ தம்மை அறிமுகப்படுத்துவார்கள் தமிழின வாதிகள்.
இவ்வாறான கேலிக் கூத்துதிற்கு உரிமைப் போராட்டம் என்று வேறு பெயர்வைத்து மகிழ்கிறார்கள்.