Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை.

11.10.2008.

உணவு, எரிபொருள் விலை அதிகரிப்பாலும் வங்கி வைப்புத் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியாலும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஆபிரிக்க, ஆசிய, மத்திய கிழக்கு நாடுகள் 28 இன் பெயர்கள் உலக வங்கியின் பிந்திய அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சந்தை நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் வளர்ந்துவரும் நாடுகளை மனிதாபிமான ரீதியில் மீட்க வேண்டிய தேவையை உலகம் மறந்துவிடக்கூடாது என்று உலக வங்கியின் தலைவர் ரொபேர்ட் சோலிக் தெரிவித்துள்ளார்.

ஜோர்தான், கம்போடியா, லெபனான், கமெய்சா, எரித்திரிய, எதியோப்பியா, தஜிகிஸ்தான், மடகாஸ்கர், நேபாளம், இலங்கை, ருவாண்டா, மாலாவி, ஐவரிகோஸ்ட், பிஜி, ஹெய்ட்டி, சீசெல்ஸ், மௌரிறானியா போன்ற நாடுகள் நிதி நிலையில் மிக நலிந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் நிதி, அபிவிருத்தித் துறை அமைச்சர்களுடனான சந்திப்புக்களை இவ்வாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் உலக வங்கியின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

விலை அதிகரிப்பு மோசமாக உயர்வடைந்திருக்கும் நிலையில் புதிய கடன்களை பெற்றுக்கொள்வதற்கான சக்தி இந்த நாடுகளிடம் இல்லையெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செல்வந்த நாடுகள் இயற்கை வளங்கள் மூலம் அதிக வருவாயை திரட்டி தமது நாணயத்தை வலுவானதாக்கி கொள்ளக்கூடும் என்றும் அதேசமயம் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள நாடுகள் மோசமான பணவீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வளர்ச்சி வீதம் 4 சதவீதமாகவே இருக்குமென உலக வங்கித் தலைவர் சோலிக் கூறியுள்ளார். கடந்த ஏப்ரலில் 6.6 சதவீதமாக இருக்குமென உலக வங்கி எதிர்வு கூறியிருந்த போதும் இப்போது 4 சதவீதமாகவே இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த நாடுகளின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையானது முதலீட்டுத் துறையிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் அதேசமயம், தளம்பலடையும் நிதி நிலைமையும் நாணயக் கொள்கையை இறுக்கமாக்குவதும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை கடுமையாக தாக்கும் என்றும் சோலிக் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன் உணவு, எரிபொருள் விலை அதிகரிப்பால் 100 மில்லியன் மக்களை மேலும் வறுமைக்குள் தள்ளிவிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version