Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மைத்திரி-ரணில் நல்லாட்சி என்பது முன்னைய ஆட்சிகளின் தொடர்ச்சி: சி.கா.செந்திவேல்

sentilvelஇன்றைய மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி என்பது சாராம்சத்தில் முன்னைய ஆட்சிகளின் தொடர்ச்சியாகும். மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக முன்வைத்த வாக்குறுதிகள் கடந்த ஒன்றேகால் வருட ஆட்சியில் உருப்படியாக எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அதனால் பாத்திரமும் பழையது உள்ளே இருக்கும் பானமும் பாவனைக்கு உதவாத புளித்து போன பானமாகவே காணப்படுகிறது. ஆனால் நல்லாட்சி என்ற வர்ணத்தில் அமைந்த லேபல் மட்டுமே புதிதாகக் காட்சி தருகிறது.

இந்நிலையில் நாட்டில் மோசமாகி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கோ அல்லது தீர்வின்றி இருந்து வரும் தேசிய இனப் பிரச்சினைக்கோ நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என நம்புவது முட்டாள் தனமான வெறும் எதிர்பார்ப்புக்களாகவே இருக்கமுடியும். ஜனாதிபதி தனது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நிலைப்பாட்டில் நின்று தேசிய பொருளாதாரம் பற்றியும் உள்ளுர் உற்பத்தி பற்றியும் பேசிவருகிறார். ஆனால் பிரதமர் தனது அரசியல் குருவான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் விதேசியக் கொள்கைகள் பற்றி உயர்வாகப் பேசிவருகிறார்.இவற்றால் நாடு முன்னேற்றகரமான பாதையில் செல்ல முடியாது தடுமாறி நிற்கும் போக்கே காணப்படுகிறது.இவற்றின் அரசியல் பொருளாதார அடிப்படைகளை மக்கள் விளங்கிக் கொண்டு தமக்கான மாற்று வெகுஜன அரசியல் பாதையில் முன் செல்ல முன்வரவேண்டும் என்பதே எமது கட்சி இம் மே தினத்தில் விடுக்கும் செய்தியாகும்.

இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் நடாத்திய புரட்சிகர மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் கூறினார். கட்சியின் வட பிராந்திய செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில்இஅவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்இ நாட்டின் பொருளாதாரம் மோசமான நெருக்கடிகளை எதிர்நோக்கி நிற்கிறது. இவற்றை எதிர் கொள்வதற்குப் பெரும் தொகை அந்நியக் கடன்களை பெறுவதும் அன்னிய முதலீடுகளை வரவளைப்பதுமே ஆட்சியின் பிரதான கொள்கையாகக் காணப்படுகிறது.அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாணய நிதியம் ஜந்து நிபந்தனைகள் கீழ்1.5 பில்லியன் அ.டொலர்கள் கடனாகக் கொடுத்திருக்கிறது.இதன் காரணமாகவே வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.இதனால் பொருட்களின் விலைகள் உயர்ந்து வாழ்க்கை செலவு மேலும் அதிகரிக்க போகின்றது. இதனால் சாதாரண உழைக்கும் மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர் நோக்கப் போகின்றார்கள்.

அதே வேளை அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டின் தென் பகுதி சீனாவிடமும் வடக்கு கிழக்கு இந்தியாவிடவும் கொடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஜரோப்பிய முதலீடுகளும் பல்வேறு பகுதிகளில் புகுத்தப்படவுள்ளன குறிப்பாக ‘எட்கா’ எனப்படும் பொருளாதார தொழிநுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்தியாவுடன் செய்து கொள்ள ஏற்பாடுகள் இடம் பெறுகின்றன. இவற்றினால் வரப்போகும் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் நாட்டின் அனைத்து மக்களையுமே பாதிக்க போகின்றன.
இதே போன்றதே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் வெறும் எதிர்பார்ப்புகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. முன்னய ஆட்சியினர் போன்று தேசிய இனப்பிரச்சினையை இழுத்தடித்து வருவதையே காணமுடிகிறது அதே வேளை இந்த அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தி வரும் தமிழ் .தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர் இரா.சம்பந்தனும் விழுங்கவும் முடியாது கக்கவும் முடியாது என்ற நிலையில் தீர்வு வரும் வரும் என்று தமிழ் மக்களுக்கு போக்குக் காட்டி வருவதைக் காணமுடிகிறது.அதுவரை இவர்களது இணக்க அரசியலால் தமிழ் மக்கள் எதிர்நோக்கி நிற்கும் பிரதான பிரச்சினைகளுக்குரிய தீர்வை நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொடுக்கமுடியவில்லை. அதே வேளை தமிழ் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சமஷ;டித் தீர்வே தமது தீர்வு என்று வடக்கு கிழக்கில் உரத்தும் பாராளுமன்றத்தில் அடக்கியும் வாசித்து வருகின்றர்கள்.இவர்களது இணக்க அரசியல் போக்கானது இறுதியில் தமிழ் மக்களுக்கு அரசியல் ஏமாற்றத்தையும் விரக்தியையும் கொண்டுவரவே செய்யும். எனவே தமிழ் மக்கள் தமது தமிழ்த் தேசியவாத அரசியல் தலைமைகளால் வென்றெடுக்கமுடியாமல் போன கொள்கைகளின் இயலாமையை பட்டறிவுடன் நோக்கவேண்டும்.ஆகவே இன்றைய அரசியல் யதார்த்தத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு மக்களுக்குரிய மாற்று அரசியலை வெகுஜனப் பேராட்டங்களின் ஊடாக வென்றெடுக்க வேண்டும் என மேற்படி உரையில் குறிப்பிட்டார்.மேலும் இக் கூட்டத்தில் கட்சி தொழிற்சங்கஇ இளைஞர் முன்னனி என்பவற்றில் பிரதிநிதிகளும் உரையாற்றினர்.

Exit mobile version