Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மைத்திரி – மகித்த இரகசியப் பேச்சுவார்த்தை : அணிசேரும் சமூகவிரோதிகள்

mahindaமைத்திரிபால சிரிசேனவிற்கு நெருக்கமான தரப்புக்களை ஆதாரம் காட்டி ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் மைத்திரி-மகிந்தவிற்கு இடையிலான இரகசிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால குழுவினர் நடத்திய இரகசியக் கருத்துக்கணிப்பு ஒன்றில் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகப்படியான ஆசனங்களை வெற்றிகொள்ளும் என்றும் இரண்டாவது இடத்தில் மகிந்த அணியும் மூன்றாவது இடத்தில் மைத்திரிபால அணியும் ஆசனங்களை வெற்றிகொள்ளும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மகிந்த ராஜபக்சவிற்கு சில சலுகைகளை வழங்குமாறு மைத்திரிபால சிரிசேனவின் உயர்மட்ட ஆலோசகர் குழு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1. சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ இற்கு வழங்கப்பட்டது போன்ற உயர் தர கௌரவ தகமை ஒன்றை வழங்குவது.

2. நாமல் ராஜபக்சவிற்கு உதவி ஜனாதிபதி பதவி வழங்குவது.

3. மகிந்த ராஜபக்ச மீதான குற்றங்களை முழுமையாக விலக்கிக்கொள்வது.

இத் தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும் இதற்கான வாய்ப்புக்கள் காணபடுவதை மறுக்கவியலாது.

உலகின் மிகப்பெரும் இனக்கொலையாளிக்கு இவ்வாறான விருது வழங்கப்படுவதும் அவர் பாதுகாக்கப்படுவதும் இலங்கை மக்களின் அவமானம் என்பதைக் கூட இடது சாரிகள் எனக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பி இனர் கூட மக்கள் மத்தியில் கூறத் தவறிவிட்டனர்.

சிறீ லங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ராஜபக்சவோடு பணச் சூறையாடலில் பங்காற்றிய சில அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தை தூண்டி வாக்குக்களைப் பொறுக்கும் நடவடிக்கையால் மகிந்த ராஜபக்ச அணிக்கு மைத்திரி அணியிலும் அதிகமான வாக்குகளை எதிர்பார்க்கின்றனர்.

டொன் அல்விஸ் ராஜபக்ச என்ற கத்தோலிக்கரின் மகனான பேர்சி மகிந்த ராஜபக்ச சிங்களவரும் அல்ல. மலாயன் கத்தோலிகர்கள் என்ற உண்மை பலருக்குத் தெரிந்திருந்தது. பிரேமதாசவைத் தவிர இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த அரச தீவிரவாதிகளாகப் பதவிவகித்த அனைவருமே கத்தோலிக்கர்கள் அல்லது கிறீஸ்தவர்கள். இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களத் தீவிரவாதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க, ஜுலியட் ரிச்சார்ட் ஜெயவர்தன போன்றவர்கள் வலுவான கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்டவர்கள். பேரினவாத்ததைத் தூண்டி மக்களைப் போதையூட்டி வைத்திருப்பதற்காகவே இவர்கள் பௌத்தத் தீவிரவாதத்தைப் பேசினர்.

இனவாதிகள் எந்த இனக்குழுவைச் சார்ந்தவர்களானாலும் தமது இனத்தின் மீதான பற்றுதலால் இனவாதிகளாவதில்லை. அடிப்படையில் இனவாதத்தைத் தூண்டி அதனை வாக்குகளாக மாற்றுவதே அவர்களின் அடிப்படை நோக்க்கம்.

தனது இழந்த அதிகாரத்தைக் கையகப்படுத்த மகிந்த அணி இனவாதத்தைத் தூண்டி மக்களை அழிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு எதிரான காத்திரமான அரசியல் மைத்திரியிடமோ அல்லது ஜே.வி.பி போன்ற கட்சிகளிடமோ காணப்படவில்லை.

இதனால் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள மைத்திரி மகிந்தவோடு சமரசத்திற்கு வந்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மறுபக்கத்தில் மகிந்தவுடன் மைத்திரி ஒப்பந்தம் செய்துகொள்வாரானால் மைத்திரியின் வாக்குக்கள் சந்திரிக்கா அணிக்கும் யூ.என்.பி இற்கும் செல்லும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் யூ.என்.பி அதிக பலத்தைப் பெறும் வாய்ப்புகளே காணப்படுகின்றன.

இங்கு கிடைத்துள்ள குறைந்தபட்ச ஜனநாயகத்தைப் பயன்படுத்தி மக்களை அணிதிரட்டத் தவறிய தமிழ்க் கட்சிகள் இரண்டில் ஒரு பேரினவாதக் கட்சியில் தொற்றிக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version