தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மேலும் சிக்கலான அரசியல் சூழலுக்குள் இழுத்துவரப்பட்ட இந்த நாளில் ராஜபக்ச குடும்ப அரசு உலக கிரிமினல் அரசுகளால் பாராட்டப்பட்டது.ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க அரசு, இந்திய அரசு போன்ற அனைத்து உலக நாடுகளும் சுற்றிவர அமர்ந்து அனாசயமாகப் பார்த்துக்கொண்டிருக்க முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட மக்கள் கொலைசெய்யப்பட்டனர்.
குழந்தைகள், முதியவர்கள், நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற அனைவரும் எந்த வேறுபாடுமின்றி சாரிசாரியாகக் கொலைசெய்யப்பட்டு மனிதப் பிணங்களின் மேல் இலங்கையரசு தனது வெற்றியை நிலைனாட்டிக்கொண்டது.
சாரிசாரியாக நடத்தப்பட்ட மனிதப் படுகொலைகளை மீட்பு நடவடிக்கை என உலக மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மலைய-முஸ்லீம் தமிழர்களுக்கும் தனது ஊதுகுழல் ஊடகங்களூடாக இலங்கையரசு பிரச்சாரம் மேற்கொண்டது.
உலகின் ஒரு மூலையில் அதிபயங்கரக் கொலைகாரர்களால் ஆளப்படும் பாசிச அரசு எந்த அச்சமும் இன்றி நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் ஜனநாயகவாதிகள் என்று அறிவித்தது.
சிறிது சிறிதாக இலங்கை அரசும் அதன் ஏகபோக எஜமானர்களும் விரும்பிய அரசியல் பொறிமுறை நிலைநாட்டப்பட்டது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் திட்டமிட்டு நடத்தப்பட்ட இப்படுகொலைகளின் பின்னர், திட்டமிட்டபடியே தமிழ் அரசியல் தலைமை விதேசிகளின் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டெழ வேண்டிய போராட்டத்தை தவறாக வழி நடத்திய தமிழ் அரசியல் தலைமைகள் மக்களிடமிருந்து உண்மைகளை மறைத்தன. போலி நம்பிக்கைகளை வழங்கி போராட்டத்தை முழுமையாகச் சிதைத்து நீண்ட காலத்திற்குப் பிந்தள்ளின. ஐந்து வருடங்களின் தமிழ்ப் பேசும் மக்களின் நிலங்கள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. இராணுவக் குடியிருப்புக்களால் வடக்கும் கிழக்கும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் வடக்கும் கிழக்கும் நிரப்பப்பட்டுள்ளது. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களால் மக்களின் எஞ்சிய உழைப்பும் கொள்ளையிடப்படுகின்றது.
போராட்டத்தை அழித்தவர்களால் உலகம் முழுவதும் கையகப்படுத்தப்பட்ட தமிழ் தலைமைகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் விட்டுக்கொடுப்புக்களுக்கும் சரணடைவுகளுக்கும் அப்பால் முன்னெடுக்கபட வேண்டும் என்பதை இந்த நாளில் நினைவுகொள்வோம்.
-இனியொரு