Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேற்குவங்க அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சு- பின்னணியில் பாஜக?

மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அம்மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையில் மோதல் முற்றி வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மேற்கு வங்க மாநிலத்தில் செல்வாக்கு இல்லை. ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  சில இடங்களில் வென்றது.

இம்முறை மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்று பல வேலைகளைப் பார்த்து வரும் பாஜக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர வேண்டும் அல்லது வேறு ஏதேனும் ஒரு கட்சியில் சேர வேண்டும் என  நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்க தொழிற்துறை அமைச்சர் ஜாகிர் உசேன் முர்ஷிதாபாத்தில் உள்ள நிமித்தா ரயில் நிலையத்தில் இருந்து குடும்பத்தினருடன் கொல்கொத்தா செல்ல தயாரான போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார்கள். இதில் அமைச்சர் படுகாயம் அடைந்தார். அமைச்சர் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர்.

அமைச்சர் திவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை மம்தா பானர்ஜி சந்தித்து உடல் நலம் விசாரித்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,

“எங்கள் கட்சியை எப்படியாவது இல்லாமல் ஆக்கி அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். அமைச்சர் ஜாகீர் உசேன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி. அவரை வேறு கட்சியில் சேரச் சொல்லி  தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்து வந்தார்கள். அந்த நெருக்கடியின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் இப்போது நடந்துள்ளது”என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Exit mobile version