Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மேடைகளில் வீறாப்பு பேசிய ஹக்கீம் இன்று சோரம் போய் விட்டார் : அசாத்சாலி

திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்குமாயின் அது இன்னுமொரு சமூகத்தை காட்டிக் கொடுக்கும் செயலாகும்

என கொழும்பு மாநகர முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மறைந்த தலைவர் அஷ்ரஃப் இன்று உயிருடன் இருந்திருந்தால் இச்சட்ட மூலத்தை எதிர்த்திருப்பார். தனது பேரம் பேசும் சக்தியை, அரசியல் பலத்தை வெளிக்காட்டியிருப்பார். சமூக நலனுக்காக தனது பதவியை தூக்கி எறிந்திருப்பார். ஆனால் இன்றுள்ள தலைவர் ரவூப் ஹக்கீம் தேர்தல் மேடைகளில் வீறாப்பு பேசி விட்டு பேரம் பேசாமல் சோரம் போய் விட்டார்.

ஒரு சில தினங்கள் மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்ட மக்களின் 7400 வாக்குகளைப் பெற்றவன் என்ற வகையில் அந்த மக்களுக்கு நன்றி கூறி என்றும் அவர்களுடன் இருப்பேன்.

நாடிக்கும், நரம்புக்கும் தொடர்பற்ற ஒருவராக ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்தி தாம் செய்த தவறுகளை மறைக்க பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் முற்பட்டமை வேடிக்கையாகும்.

ஆரம்ப காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி ஊடாகவும் பின்னர் தேசிய காங்கிரஸில் இணைந்து அதாவுல்லாவுடன் அரசியலில் பயணித்த ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக பேசுவது அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதை காட்டுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மும்மொழியிலும் பேசி விவாதிக்கும் நபர்களுக்கு கால்பறிப்பு இடம்பெறும் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

சமூக நலனை கிடப்பில் போட்டு விட்டு சுயலாப அரசியலுக்காக திவிநெகும சட்ட மூலத்தை இவர்கள் ஆதரித்தால் இதற்கான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் ஆணைக்கு அடி பணிய வேண்டுமே தவிர அரசின் முகவராகவுள்ள ஆளுநருக்கு அடி பணியக்கூடாது.

கிழக்கு மாகாண ஆளுநரை வீட்டுக்கு அனுப்புவேன் என்று தேர்தல் மேடைகளில் சூளுரைத்த ரவூப் ஹக்கீம் இன்று அவருடன் கைக்கோர்த்துள்ளமை அவரின் அரசியல் அநாகரிகமாகும்.

சிறுபான்மை சமூகங்களின் இருப்புக்கு கேள்வி ஏற்பட்டுள்ள நிலையில் திவிநெகும சட்ட மூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளித்தால் இதை விட பாரிய தவறு எதுவும் இல்லை. இதனை இறைவன் கூட மன்னிக்க மாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version