Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மெல்லிசைமன்னர் T.K.ராமமூர்த்தி நினைவாக : T.சௌந்தர்

வசந்த காலம் வருமோ….

மெல்லிசைமன்னர் T.K.ராமமூர்த்தி [ 1922 – 17.04.2013 ] மறைந்து விட்டார்.தமிழ் திரை இசையின் பொற்காலத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்கள்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள்.

தமிழில் முதல் இரட்டையர்களாக லக்ஷ்மன் பிரதர்ஸ் என்பவர்கள் இருந்தார்கள்.ஆனாலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை தான் புகழின் உச்சிக்கு சென்றது.ஹிந்தி சினிமாவில் சங்கர் – ஜெய்கிஷன் என்ற இரட்டையர்களை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழில் இவர்களின் இணைவு பல சாதனைகள் செய்து காட்டியது.

இசைக்குடும்பத்தில் பிறந்த ராமமூர்த்தி வயலின் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்ததால் H.M.V என்ற இசைக்கம்பனியில் வயலின் கலைஞராக தன் இசை வாழ்வை ஆரம்பித்தார். அங்கே இசையமைப்பாளராக பணியாற்றிய இசைமேதை C.R.சுப்பராமன் இவரின் திறமை அறிந்து தனது இசைக்குழுவில் சேர்த்துக்கொண்டார்.சுப்பராமனின் குழுவில் ஹார்மோனியம் வாசிக்கும் கலைஞராகத் தன்னை வளர்த்துக் கொண்ட விஸ்வநாதனை சந்தித்தார்.இருவரும் சுப்பராமனின் உதவியாளராக வளர்ந்தார்கள்.

தேவதாஸ் [ 1952 ] என்ற படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்த C.R.சுப்பராமனின் திடீர் மறைவு [ 27 வயதில்] விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைக்கு அந்த படத்தை முடித்துக் கொடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தது.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் இணைக்கப்பட்ட மெல்லிசைமன்னர்கள் பணம் [1952] படத்தில் மூலம் அறிமுகமானார்கள்.

ஓங்கிக் குரல் எடுத்து நாடகப்பாங்கில் பாடிக்கொண்டிருத தமிழ் சினிமாவை மெல்லிசைப் பக்கம் திருப்பியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.1952 இலிருந்து 1965 வரை தேனிலும் இனிய பாடல்களால் தமிழ் மக்களை மூழ்கடித்த சாதனையாளர்கள்.நெஞ்சை விட்டகலாத அவர்கள் பாடலில் சம்பிரதாயமான ராகம் இருக்கும் அதே நேரம் புதுமையான வாத்திய இணைவும் இருக்கும் படியான நவீனத்தை முதன் முதலில் தமிழ் சினிமாவில் செய்து காட்டிய சாதனையாளர்கள்.ஹிந்தி திரைப்பாடல்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பாடல்களுக்கு நிகராக தம்மாலும் செய்ய முடியும் என நிரூபித்துக் காட்டியவர்கள் இந்த இரட்டையர்கள்.

தங்களால் சாத்தியமான அளவு உலக இசையின் போக்குகளை எல்லாம் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்த சேர்த்த மேதைகள்.தனியே பாடல்களில் மட்டுமல்ல வாத்தியங்களின் இடை இசை போன்றவற்றிலும் பல புதுமைகள் செய்தார்கள்.இது எவ்வாறு சாத்தியமாயயிற்று ?

தமிழ் செவ்வியல் இசையில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர் ராமமூர்த்தி. உலக இசையின் போக்குகளை அறிவதில் அளவில்லா ஆர்வம் கொண்டவர் விஸ்வநாதன். இந்த இரண்டு ஞானங்களுமே அவர்களின் புதுமையும் , இனிமையும் மிக்க பாடல்கள் உருவாகக் காரணமாயின.

தங்கள் இசையமைப்புப் பற்றி ராமமூர்த்தி ஒரு பட்டியில் பின்வருமாறு கூறினார்.

” படத்தில் ஒரு காட்சி பற்றி சொன்னதும் அந்த சூழ்நிலைக்கு பொருத்தமான ராகத்தை சொல்லி அதன் வடிவம் எப்படி இருக்கும் என்பதை அறிய என்னை அந்த ராக வாசித்துக் காட்டும் படி விசு கேட்பார்.குறிப்பிட்ட அந்த ராகத்தை ஒட்டி பாடல்களை அமைப்போம்.”

அவர்களின் பாடல்களில் ராகம் அடிப்படையானதாக இருந்தாலும் , அவை துருத்திக் கொண்டு வெளியே தெரிவதில்லை.அவை பாடல்களின் உணர்ச்சி பாவங்களில் ஒளித்து வைக்கும் அபூர்வ கலையை ஒரு கைத் தொழிலாக செய்து காட்டிய இசை மூலவர்கள்.

” அவர்களுடைய பாடல்கள் எனது நாடி, நரம்பு, ரத்தத்தில் ,உடம்பில் எல்லாம் ஊறிப்போனது.அவர்கள் இட்ட பிச்சை தான் என் இசை ” என இசைஞானி இளையராஜா கூறியிருப்பது மிகையான வார்த்தையல்ல.

நெஞ்சங்களை நெகிழ வைக்கும் பல பாடல்களைத் தந்த இசை மேதைகள் கருத்து முரண்பாட்டால் பிரிந்தது இசை ரசிகர்களுக்கு பேரிழப்பாக அமைந்தது.

மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி , விஸ்வநாதன் போல் வெற்றி பெற முடியவில்லை.குறைந்த எண்ணிக்கையில் படங்களுக்கு இசையமைத்தார்.எனினும் அவற்றிலும் தன திறமையைக் காட்டினார்.சினிமாவில் வெற்றி பெறுவதற்கு தனியே திறமை மட்டும் போதுமா என்பது விடை தெரியாத கேள்வியாகும்.சக்கட்டைகளை உயர்த்தி வைப்பதும் , திறமையாளர்களை ஒதுக்கி வைப்பதும் சினிமாவுக்கு புதியதல்ல.

பிரிவுக்குப் பிறகு சினிமாவில் தன்னை பயன்படுத்தாததை ” விசித்திர சூழ்நிலை ” என்று சொல்லியிருக்கின்றார்.அதே கருத்தை தான் ஒதுக்கபட்ட ஏ.எம்.ராஜாவும் கூறியிருந்தார்.

அவர் ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவற்றில் தன முத்திரையை பதித்தார். அவர் இசையமைத்த மறக்கமுடியுமா [ 1966] படத்தில் இடம் பெற்ற ” காகித ஓடம் கடலலை மீது ” என்ற பாடல மிகவும் புகழ் பெற்றது.இன்னும் சில பாடல்கள்.

1. தன்னந் தனியாக நான் வந்த போது – படம் சங்கமம் – டிஎம்.சௌந்தரராஜன் + பி.சுசீலா
2. கள்ளப்பார்வை கண்ணுக்கு இன்பம் – எங்களுக்கும் காலம் வரும் – பி.பி.ஸ்ரீநிவாஸ் + பீ.சுசீலா
3. காதலன் வந்தான் கண் வழி சென்றான் – மூன்றெழுத்து – பி.சுசீலா
4. நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு சிறந்தது – தங்கச் சுரங்கம் – டிஎம்.சௌந்தரராஜன்
5. சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் – தங்கச் சுரங்கம் – டிஎம்.சௌந்தரராஜன் + பீ.சுசீலா

போன்ற பாடல்கள் பிரபலமைந்தன.இருந்தாலும் தனது இசையமைப்பில் வெளிவந்த ” மறக்கமுடியுமா ” படத்திற்கு என இசையமைக்கப்பட்ட ” வசந்த காலம் வருமோ நிலை மாறுமோ ” [ பாடலை எழுதியவர் கலைஞர் கருணாநிதி ] என்ற பாடல் மிகவும் சிறந்த படைப்பாக கருதினார்.

“அந்தப் பாடல் படத்தில் சேர்க்கப்படாதது தனக்கு மிகவும் கவலை அளித்தது .ஜேஸுதாஸ் என்ற திறமைமிக்க பாடகரை ,ஆரம்ப காலத்திலேயே இனம் கண்டு சுசீலாவுடன் இணைந்து பாட வைத்தேன்.அந்த பாடல் படத்தில் வந்திருந்தால் ஹிட் ஆகி புகழ் பெற்றிருக்கும் ” என்றும் ஒரு செவ்வியில் கூறியிருந்தார்.

அன்றைய நாளில் ” வசந்த காலம் வருமோ ” பாடல் அமைக்கப்பட்ட ராகம் பலரும் பயன்படுத்தாத ஓர் அபூர்வராக விளங்கிய வலஜி ராகத்தில் அமைத்திருந்தார்.பின்னாளில் அபூர்வ ராகங்களில் விஸ்வநாதன் இசையமைத்த ” அதிசய ராகம் ஆனந்த ராகம் ” என்ற பாடல் [ படம்: அபூர்வராகங்கள் – 1975 ] இந்த வலஜி ராகத்தின் சாயலைக் கொண்ட ராகமாகும் என்பது குறிப்பிடத் தக்கது.அந்த ராகத்தின் பெயர் மகதி என்பதாகும்.

சினிமா இசை தவிர்த்து பக்திப் பாடல்களுக்கும் இசையமைத்தார் ராமமூர்த்தி.

” ஈச்ச மரத்து இன்பச் சோலையில் நபி நாதரே ” என்ற சிறந்த பாடலையும் அபூர்வ ராகம் என்று சொல்லக்கூடிய ” ஜனச மோகினி ” என்ற ராகத்தில் அமைத்து பெருமை சேர்த்தார்.

இசையமைக்கும் வேகம் கொண்ட விஸ்வநாதன் பல படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றிருந்தாலும்.அவருடைய சாதனைப்பாடல்களைப் பட்டியல் இடும் போதும் பலரும் அவர் ராமமூத்தியுடன் இணைந்து இசையமைத்த ப , பா வரிசைப்படங்களில் [ பாசமலர் , பந்தபாசம், பாலும் பழமும் , பணத்தோட்டம் , பாவமன்னிப்பு போன்ற ] வெளிவந்த பாடல்களையே சாதனை பாடல்களாக கூறுவர்.பலரும் ராமமூர்த்தி அவர்களை தவிர்த்துச் சொல்வதை கேட்டிருக்கின்றேன்.

அவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த பாடல்களில் இருந்த ஈர்ப்பு , விஸ்வநாதன் தனியே இசையமைத்த பாடல்களை விட சற்று அதிகம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

நெஞ்சில் நிலைத்த பல பாடல்கலைத் தந்த ஒரு இசை மேதை சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பது இசை ரசிகர்களின் கருத்தாகும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்த பொது ஜெயகாந்தன் பினவருமாறு கூறினா.

காலம் கவிஞனைக் கொன்றுவிட்டது – அவனது
கவிதை காலத்தை வென்று விடும்

அதை நிரூபிப்பது போல எனது பத்து வயது மகள் அடிக்கடி பாடும் ராமமூர்த்தி இசையமைத்த

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…..

என்ற பாடல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் பல சந்ததிகள் தாண்டியும் ஒலிக்கும்

Exit mobile version