எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்ற மரணபயத்துடன் பதினைந்து ஆண்டுகள் சிறைக்குள் வாழ்ந்த மூன்று அப்பாவி இளைஞர்கள் இன்று முதல் அப்படி அச்சம் கொள்ளத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்திய அரசு- அது பாரதீய ஜனதா ஆட்சியாக இருந்தாலென்ன காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலென்ன – கருணையற்ற பயங்கரவாதக் கொலைகளைத் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடத்தியிருக்கிறது.
இந்துத்துவத்திலும் இஸ்லாமிய எதிர்ப்பிலும் காலகாலமாக ஊறவைத்து வெதும்பிய பெரும்பான்மை இந்துக்களின் மனோநிலையை அறிந்து வைத்திருந்த காங்கிரஸ் அரசு அவர்களின் வாக்குகளை பொறுக்கிக்கொள்வதற்காக அப்பாவி அப்சல் குருவை இழுத்துவந்து துக்கிலிட்டுக் கொன்றது.
இந்திய ஆளும் வர்க்கம் தனக்குத் தேவையேற்படும் போதெல்லாம் அப்பாவிகளைப் பலிகடாக்களாக்குவது வழமையான செயல்.
அவ்வாறு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகளே இந்த மூன்று பேரும். நிலப்பிரபுத்துவ மதவாதம் கலந்த இந்திய அதிகாரவர்க்கத்தின் கூறுகளான நீதிமன்றம், பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றின் மோசடி இந்த மூவரையும் மரண அச்சத்தில் இதுவரை வாழப்பணித்தது. இவர்களை விசாரணை செய்த தியாகராசன் என்பவர், ஓய்வெடுத்துக்கொண்ட பின்னர் வாக்குமூலம் தண்டனை வழங்கும் வகையில் பொய்யாகப் பதிவுசெய்யப்பட்டது என்பதைக் கூறியிருக்கிறார்.
மூன்று மனிதர்களைப் புதைகுழியின் விழிம்பில் பதினைந்து வருடங்களாக வாழவைத்த பின்னராவது அவருக்கு மனசாட்சி உறுத்தியது உண்மைகளை வெளிக்கொண்டுவந்திருக்கிறது.
பொதுவெளிகளில் மக்கள் மத்தியில் பட்டப்பகலில் மனிதர்களைச் சித்திரவதை செய்து பழக்கப்பட்ட இந்திய அரசபடைகள் இவர்களிடம் சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டது.
பதினொரு வருடங்களாக கருணை மனு விசாரிக்கப்படவில்லை என்ற தாமதத்தைக் காரணமாக முன்வைத்து மூவரது தண்டனையும் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது.
ஏன் அப்பாவிகள் சிறை வைக்கப்பட்டார்கள், அவர்களின் விடுதலை என்ற சலசலப்பில் ரஜீவ் காந்தி கொலையின் சூத்திரதாரிகள் எப்படி மறைந்துகொண்டார்கள் என்பதெல்லாம் இன்னும் வெளியே வரவில்லை. கொலை செய்வதற்கே விடுதலைப் புலிகள் கருவியாகப் பயன்படுத்தப்பட்டனர். அதன் உயர்மட்டச் சூத்திரதாரிகள் யார் என்பதெல்லாம் வெளிவராமலே போகலாம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறுகையில், ‘கோர்ட் தீர்ப்பை விவாதம் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டியது மரபு, தண்டனை பெற்ற மூன்று பேரும், குற்றவாளிகள் அல்ல என்று எவரும் சொல்லவில்லை. தடா கோர்ட் முதல், சுப்ரீம் கோர்ட் வரை அவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட பின்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்டது,’ என்றார். கொலையின் சூத்திரதாரிகளை மறைத்துவைக்க வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்புகிறது என உறுதியாகிறது.
இதற்கு மேல் குற்றவாளிகளை விடுவிப்பதற்கும், தூக்குத்தண்டனையக் குறைப்பதற்கும் சுப்பிரமணிய சுவாமி, இந்துத்துவ ஊடகங்கள் போன்றன தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்துவந்தன.
பாரதீய ஜனதா என்ற கட்சியின் இந்த முன்முகங்கள் ஈழப் போராட்டத்திற்கும், அப்பாவிகளின் விடுதலைக்கும் எதிராகக் குரல்கொடுக்கும் அதே வேளை நாளையே ஈழம் சமைத்துத் தருவதாகக் கூறும் வை.கோ இவர்களோரு கூட்டுச் சேர்ந்து மக்களிடம் வாக்குக் கேட்கிறார். புலம்பெயர் தமிழர்களால் தீனிபோட்டு கொழுக்கவைக்கப்பட்ட வை.கோபாலசாமி போன்ற சாபக்கேடுகளே மூவரின் விடுதலைக்கும் காரணம் என்று மக்களின் போராட்டத்தைக் கொச்சப்படுத்தும் கூட்டம் இன்னும் எம்மத்தியில் வாழ்கிறது.