Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மூளைச் சலவை செய்யும் ஊடகங்கள் உண்மையை மறுக்கின்றன:எழுத்தாளர் தி.க.சிவசங்கரன்.

 
இன்றைய ஊடகங்கள் உண்மையைத் தெரிவிக்க மறுக்கின்றன. அவை மக்களை மூளைச்சலவை செய்து வருவதாக முதுபெரும் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தி.க.சிவசங்கரன் கூறினார்.திருநெல்வேலியில் புத்தா பண்பாட்டு ஆய்வு மையம், சித்திரசபை சார்பில் தி.க.சியின் 86-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் ச.செந்தில்நாதன் விழாவிற்கு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், எழுத்தாளர்களை வாழும் காலத்திலேயே வாழ்த்த வேண்டும். தி.க.சி. யின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பணியை தினமணி செய்ய வேண்டும். அதற்கான நிதியை எழுத்தாளர்கள் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்றார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அந்த அறக்கட்டளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். கவிஞர் கிருஷி வரவேற்றார்.

இவ்விழாவில் தி.க.சிவசங்கரன் ஏற்புரையில் கூறியதாவது: என்னை படைப்பாளிகளின் படைப்பாளி எனப் புகழ்ந்துரைத்தனர். அந்த புகழுரைக்கு முழுத் தகுதி உடையவர் வல்லிக்கண்ணன்தான். அவரிடம் ஆணவம், மேட்டுக்குடி தன்மை, குறுங்குழுவாதம் ஆகிய மூன்றும் இல்லாமல் இருந்ததுதான் அதற்குக் காரணமாகும். இன்றைய எழுத்தாளர்கள் இந்த குணங்களால் பிறரை வதைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சில அறிவுஜீவிகளிடம் இந்த மூன்று குணங்களும் இருந்து கொண்டு கேடு விளைவித்து வரு கின்றன. இதை ஒழித்தால்தான் நல்லது. தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படையில் மாற்றம் தேவை. இல்லையெனில் நமது சுதந்திரமும், ஜனநாயகமும் பறிபோய்விடும். இதற்கு களப்பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். இன்றைய ஊடகங்கள் உண்மையைத் தெரிவிக்க மறுக்கின்றன. அவை மக்களை மூளைச்சலவை செய்து வருவதை எல்லோ ரும் அறிவோம்.

கல்வியின் தரத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். செம் மொழி மாநாடு மேட்டுக்குடி மக்களுக்காக நடைபெற உள்ளதா அல்லது சாதாரண மக்களுக்காக நடைபெற உள்ளதா? செம்மொழி மாநாடு தமிழை வாழ வைக்கவா அல்லது தற்பெருமையைப் பறைசாற்றவா? இதை செயல்பாடுகள் தெளிவுபடுத்தும்.

செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் அனைத்து வழி கல்வி முறையிலும் தமிழை பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும். இதுவே தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய முதலாவது பணியாகும். அப்போதுதான் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும். தமிழ் நாட்டில் அனைத்துவழி கல்வி முறை யிலும் தமிழை பயிற்று மொழியாக்கும் வகையில் செம்மொழி மாநாட்டுக்கு முன்னர் சட்டம் இயற்ற வேண்டும் என அவர் கூறினார். இவ் விழாவில் பேராசிரியர்கள் ஆ. சிவ சுப்பிரமணியன், தொ. பரமசிவன், எழுத்தாளர் ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். கழனியூரன் நன்றி கூறினார்.

Exit mobile version