இதுவரைகாலமும் ரஸல் பிராண் குறித்து பிளே போய் போன்ற விம்பத்தையே பிரித்தானிய மக்கள் கொண்டிருந்தனர். ரஸல் பிரான்ட், புரட்சி தவிர்க்கமுடியாதது என்று தனது நேர்காணலை முடித்த வேளையில் பதில் சொல்வதற்கு ஜெரமி பக்ஸ்மனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அரசியலில் முன்னர் ஈடுபாடுகள் எதுவுமற்ற சாமனிய நகைச்சுவை நடிகரிடமிருந்து சமூகத்தின் இன்றையை பிரச்சனைகளுக்கான மூல காரணம் சாதாரண மொழியில் கூறப்பட்ட போது மக்கள் அதனை இலகுவாக உள்வாங்கிக் கொண்டார்கள். புதிய அலை ஒன்றை இந்த நேர்காணல் பிரித்தானியா முழுவதும் ஆரம்பித்துள்ளது.
‘நான் இதுவரைக்கும் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கவில்லை. அது அக்கறையின்மையால் அல்ல. அரசியல் அதிகாரவர்க்கத்தின் அலட்சியம், துரோகம், மோசடி, பொய் ஆகியவற்றால் களைப்பும் சோர்வும் அலட்சிய மனோபாவத்தையும் அடைந்தமையாலேயே நான் வாக்களிக்கவில்லை. ஏனையவர்களையும் வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட வர்க்கம் அரசியல் அதிகாரவர்க்கத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை.
அரசியல் வர்க்கம் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு சேவைசெய்வதிலேயே அக்கறை கொண்டது. உலகம் நிர்மூலமாக்கப்படுகின்றது, நாங்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம், உலகம் முழுவதும் வறுமையடைந்தவர்களைச் சுரண்டுகிறோம். நான் புரட்சியையே தீர்வாக முன்வைக்கிறேன். நேர்மையான மாற்றத்தைக் கோருகின்றேன். இப்போதுள்ள அமைப்புக்குள் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. கோப்ரட் மற்றும் அரசியல்ல் உயர் வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக மட்டுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.’
ரஸல் பிராண்டின் இந்தக் கருத்துக்கள் சமூகத்தின் புதிய சிந்தனை மாற்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இதுவரைக்கும் ஏழைகளின் உணவைத் தட்டிப்பறித்து உண்ட அதிகாரவர்க்கம் இச் சாமானியனின் கருத்துக்களால் ஆத்திரமடைந்திருப்பது வியப்புக்குரியதல்ல.