Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மூன்று ஆப்ரிக்கக் குறும்படங்கள் :யமுனா ராஜேந்திரன்

ஆப்ரிக்க மக்களது தனிப்பட்ட வாழ்வும், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட சமூக அரசியல் பிரச்சினைகளும் இந்திய இலங்கைச் சமூகத்தவர்களுக்கு நிறைய பொதுத்தன்மைகள் கொண்டது. கூட்டுக்குடும்பம், குடும்பத்தில் பெண்ணின் மையமான இடம் போன்றன இரு சமூகங்களுக்கும் பொதுவானது. மத ஆதிக்கத்தினால் பெண் ஒடுக்குமுறை அதி அளவில் இரு சமூகங்களிலும் இருக்கிறது. அரசியலில் காலனியாதிக்கம் இரு நாடுகளுக்கும்; பொதுவானது. ஆதிகார வர்க்கத்தவரின் கொடுமைகள், எங்கெங்கிலும் தலைவிரித்தாடும் ஊழல், வறுமை போன்றனவும் இரு சமூகங்களுக்கும் பொதுவானது. இந்தப் பொதுத் தன்மைகளினால் ஆப்ரிக்கத் திரைப்படங்களை அனுபவம் கொள்வதென்பது எமது அண்டை வீட்டுமனிதரின் சுகதுக்கங்களில் பங்குபெறுவது போலும் இருக்கிறது.

நான் பார்த்த மூன்று ஆப்ரிக்கக் குறும்படங்களில் இரண்டு செனிகல் நாட்டின் அதிகாரவர்க்க நடத்தைகள் குறித்த படங்கள். சமவேளையில் நகரப்புறத்திற்கும் கிராமிய மனிதருக்கும் இடையிலான பதட்டங்களும் முரண்களும் குறித்த திரைப்படங்கள். ‘போரம் சாரட்வண்டி’

நிமிடம் : இயக்கம் மவுஸா பேத்திலி : செனிகல்) என்பன அவ்விரு திரைப்படங்கள். மூன்றாவது திரைப்படம் பர்க்கினோ பாஸோ நாட்டைச் சேர்ந்த ‘முறைசாரா உறவு’ நிமிடம் : இயக்கம் மொஹமத் ஹமாரா : பர்க்கினா பாஸோ) எனும் திரைப்படம். இத் திரைப்படம் ஆப்ரிக்க சமூகத்தில் நிலவிவந்த மரபும் பாலுறவும் குறித்து, நவீனத்துவப் பார்வையை முன்வைபப்பதாக உருவாகி இருக்கிறது.2

பச்சைப் பசேல் என்ற மரங்களும் புல்வெளிகளும் நிறைந்த திரைவெளிக்குள் பிரவேசிக்கும் ஒரு ஆப்ரிக்கத் தாய், நம்மைப் பாரத்துவிட்டு, அருவியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தனது அந்தகனான மகனைச் சாப்பிடவருமாறு அழைக்கிறாள்.

தீவிரமான யோசனையில் ஆழந்திருக்கும் தனது மகனை ‘என்ன யோசிக்கிறாய் மகனே?’ என்கிறாள் தாய். ‘அம்மா கடந்த இருபது வருடங்களாக என்னை நீ நேசித்து வந்திருக்கிறாய் அம்மா. நான் மரணமுறும் முன்பாகவாவது நான் பெண்ணின்பம் பெற வேண்டும் அன்னையே’ என்கிறான் மகன். தாய் ஆழந்த யோசனையில் ஆழ்கிறாள்.

தனது மகன் இரண்டு விழிகளும் தெரியாத அந்தகன் என்பதால்; முழுக் கிராமமும் அந்தத் தாயை எள்ளி நகையாடுகிறது. தனது மகனோடு இணை சேர இந்தத் தாய் அழைக்கும் இளம் பெண்ணும், இந்தத் தாயின் ஒரேயொரு தோழியான பெண்ணும் ‘அந்தகனுடனா படுக்க வேண்டும்?’ என அந்தத் தாயைக் கேவலமாக நடத்துகிறார்கள். அவள் கிராமத்தினுள் வந்தாலே அந்தக் கிரமாத்தவர் அனைவரும் முகம் திருப்பிக் கொள்கிறார்கள். தாய் தீராத துன்பத்தில் ஆழ்கிறாள்.

மகன் வெற்று உடம்புடன் மன நிம்மதியற்று அருவியினருகிலுள்ள பாறையில் அமர்ந்திருக்கிறான். அவனைத் தேடி வரும் தாய், ‘இனிமேல் மேலே உடுப்புப் போடாமல் அருவிப் பக்கம் வராதே’ என்று சொல்லிக் கொண்டிருக்க, அருவியில் அடித்துச் செல்லப்படும் மனிதனொருவனின் அவலக் குரல் கேட்கிறது. அடித்துச் செல்லப்படுபவனைத் தொடர்ந்து செல்லும் தாய், அவனை அருவியிலிருந்து காப்பாற்றுகிறாள்.

முகமெல்லாம் தழும்புகள் கொண்ட அவன் ஒரு மந்திரவாதி. தாய் தனது கவலையை அவனிடம் சொல்ல, ‘அதற்கு மிகப்பெரிய விலையைத் தரவேண்டும், என்னால் முடியும் என்கிறான்’ மந்திரவாதி. அவளது மகனைக் கண்கள் கட்டிய நிலையில் படுக்கவைத்து, அவன் மீது மந்திரம் ஓதி, வெளிநோக்கிக் கூக்குரலிடுகிறான் மந்திரவாதி.

அடுத்த காட்சியில், தனது குடிசையை நோக்கி வரும் தாய், தனது மேலுடுப்பில் இருந்து கிழித்த துணியுருண்டையைத் தனது வாயில் திணித்துக் கொண்டு, குடிசையினுள் சென்று படல் கதவைச் சாத்துகிறாள். தனது மேலாடை களைந்த நிலையில், கண்கள் கட்டப்பட்ட தனது மகனை நோக்கித் திரும்பிப் படுத்து, அவனது தோளைத் தன்பக்கம் திருப்புகிறாள் தாய். அடையாளமற்ற எதுவோ ஒரு பெண்ணென நினைத்து, தாயுடன் அந்தக மகன் பாலுறவு கொள்கிறான்.

மகனுக்குப் பார்வை திரும்புகிறது. மரக்கம்பை அவன் கண்ணுறுகிறான். உடைந்த கண்ணாடியில் தனது முகம் பார்த்துக் களிப்புறுகிறான். ‘அந்தப் பெண்ணுடன் இருந்த இரவின் பின், நான் பதிதாகப் பிறந்ததாக உணர்கிறேன். அப்பெண்ணை அன்னையே எனக்குக் காட்டு’ என்கிறான் மகன். ‘அவள் இரு உருவம் கொண்ட பெண். வந்தது போல் போய்விட்டாள். அவளைப் பார்க்கவே முடியாது ‘என்கிறாள் தாய்.

மகன் கண்பெற்றுவிட்டான் என்ற சந்தோசமும் சொந்தச் சோகமும் கொண்டவளான தாய், தனது கணவன் அவளுக்கு அளித்த கழுத்துப் பட்டியையும், அவனது தந்தையின் மரபான கொழுக்கொம்பையும் அவனுக்கு அளித்து, அவனைத் தனித்து வாழவெனத் தன்னிடமிருந்து பிரித்துத் தொலைதூரம் அனுப்பும்; தாய், அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, வீடு திரும்புகிறாள்.

தனி வழியே செல்லும் மகன் இடையில் ஒரு கிராமத்தில் வேற்று மனிதர்களைச் சந்திக்கிறான். காட்டு வழியில் ஓரு பெண், முயலுக்கு என வைத்த வலையில் விழுந்து அகப்பட்டுக் கொள்கிறான். அவனை மீட்கும் பெண்ணுக்கு அவன் தாய் கொடுத்த கழுத்துப் பட்டியை அணிவிக்கிறான் மகன். அதன் பின்பு அந்தப் பெண் அவனைப் பின்தொடர்ந்து நடக்கிறாள்.

அவளது கிராமத்தின் குடிசையிலிருந்து வெளியில் வரும் தாயின் கையில் ஒரு துணி மூட்டை இருக்கிறது. அவளும்; அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறி எங்கோ தொலைதூரம் செல்ல முடிவு செய்துவிட்டாள். பரந்த வெளியில், தாய் பக்கவாட்டில் திரும்புகிறபோது, அவள் கர்ப்ப வயிறு பெரிதாக நமக்குத் தெரிகிறது. அவள் நடக்கத் துவங்குகிறாள்.

3

போரம் சாரட்வண்டியும் அனாதரவானவருக்கான சான்றிதழ் எனும் இரு குறும்படங்களும் கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வரும் இரு மனிதர்களின் அனுபவங்களைச் சுட்டுவதாக இருக்கிறது.

தினந்தோறும்; தனது குதிரை வண்டியுடன் சவாரி;க்காக நகரத்திற்கு வருபவனின் கதையே முதல்படம். கிராமத்திலிருந்து நகரத்திற்கு உள்ளே வரும் ஒரு முதியபெண், வேலையற்ற இளைஞர்கள் என எவரும் அவனுக்குக் காசு கொடுப்பதில்லை. காரணம் அவர்களிடம் இல்லை. அவனும் கேட்பது இல்லை.

நகரத்தினுள் வந்த பிறகு அவன் காங்கிரீட்; கற்களை வாடகைக்கு ஏற்றுகிறான். ஓரு கர்ப்பிணிப் பெண்னை ஏற்றுகிறான். தனது பிஞ்சுக் குழந்தையைச் சவ அடக்க இடத்திற்கு எடுத்துச் செல்பவனுக்காகவும் வாடகைக்குச் செல்கிறான். சரியான சான்றிதழ் பெறாததால் ‘குழந்தையை அடக்கம் செய்ய முடியாது’ எனக் காவலளி மறுத்துவிட, குழந்தையை இடுகாட்டு வாசலில் விட்டுவிட்டு வருகிறான் குதிரை வண்டிக்காரன். குற்றவுணர்வும் கொள்கிறான். இடையில் இஸ்லாமியக் கதை சொல்லி
யைச் சந்திக்கிறான். அவனுக்குக் காசும் தருகிறான். இது அவனது அனுபவத்தின் முதல் பகுதி.இவ்விடத்தில் கோட்டம் சூட்டும் டையும் அணிந்த ஒருவன் தன்னை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எடுத்துச் செல்லுமாறு கோருகிறான். ‘அந்தப் பிரதேசத்துக்குக் குதிரை வண்டிகள் போகமுடியாது. அதற்கான அனுமதி தனக்கு இல்லை’ எனத் தெரிவிக்கிறான் வண்டிக்காரன். தனக்கு நிறைய அங்கு நண்பர்கள் இருப்பதாகவும், தான் பார்த்துக் கொள்வதாகவும் சொல்கிறான் கோட்டு சூட்டு அணிந்தவன்.

அவன் கொடுத்த தைரியத்தில்; பிரம்மாண்டமான கட்டிடங்களின் தொகுதிக்குள் அவன் குதிரை வண்டி நகருகிறது. எங்கும் நான்கு சக்கர வாகனங்கள். அவன் கடவுளைக் கும்பிடுகிறான்.

போலீஸ்காரன் அவனை வழிமறிக்கிறான். ‘அவன் அங்கு குதிரை வண்டி ஓட்டிவர அனுமதி இல்லை’ என்கிறான். பிணைப் பணம் கொடுக்க முடியாததால் அவன் தனது வண்டியை வி;ட்டுவிட்டு, குதிரையுடன் நடக்க வேண்டியவனாகிறன். சந்தடி சாக்கில் இவனது குதிரை வண்டியில் வந்தவன் இவனுக்கான கட்டணம் தராது, இவனை ஏமாறறிவிட்டு பிறிதொரு நான்கு சக்கர வாகனத்தில் அவனது பயணப் பொதிகளுடன் ஏறிப் போகிறான்.

வெறுங்கையுடன் வீடு வரும் அவனைக் குழந்தையை முதுகில்; கட்டிய அவன் மனைவி பேச்சின்றி எதிர்கொள்கிறாள். ‘இன்று இரவாவது சாப்பிடமுடியுமா?’ என அவன் கேட்டுக் கொண்டிருக்க, குழந்தையை அவன் கையில் கொடுத்துவிட்டு, வெளிவாசலைத் தாண்டும் அவன் மனைவி; தெருவில் மறைகிறாள்.

நகரத்தின் தெருக்கள், அதனது நெரிசல், ஏமாற்றும் மனிதர்கள், போலீஸ்காரர்கள், பொய்யர்கள், திருடர்கள் என அதிகார வர்க்கத்தினர் எனும் அனைவரையும் எதிர்கொள்ளும் குதிரை வண்டிக்காரனுக்கு, அவனது கிராமமும், அந்தக் கிராமத்து மனிதரும் நேசிக்கத் தக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவன் தனக்குத்தானே பேசியபடி நமக்கும் சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

4

குதிரை வண்டிக்காரனைப் போலவே அனாதரவான ஒரு பெண், வயிற்றுப்போக்கிற்கு ஆளான தனது குழந்தையை முதுகில் கட்டியபடி நகரத்தலிருக்கும் மருத்துவ மனைக்கு வருகிறாள். மருத்துவ மனை ஊழியர்கள் அங்குமிங்கும் நகர, மருத்துவ வண்டிகள் நகர, அவள் கேட்பதற்கு எவரும் சரியாக வழி சொல்வதில்லை. நான்கு சக்கர வாகனத்தில் வருகிறவர்கள், கோட்டுசூட்டு அணிந்தவர்கள் முதல் மரியாதையும் கவனிப்பும் பெறுகிறார்கள்.

அலையும் போக்கில் அவள் துணிவெளுக்கும் சுடத்திற்குப் போகிறாள். சமையலுக்காக இறைச்சி வெட்டும் கூடத்தினுள் போய்விடுகிறாள். சீட்டுக் கச்சேரியில் ஆழ்ந்திருக்கம் ஊழியர்களைச் சந்திக்கிறாள். ஊழல் எங்கெங்கும் தலைவிரித்தாடுகிறது.

ஓரு மனசாட்சியுள்ள ஊழியர் அவளை மருத்துவரிடமிருக்கும் வரிசையில் உட்கார வைக்கிறார். அங்குள்ள நோயாளிகள் அவளது குழந்தையின் நிலை கண்டு அவளை முதலில் அனுப்புகிறார்கள். குழந்தையைச் சோதிக்கும் மருத்துவர் குழந்தையைப் பிரதான மருத்துவ மனையில் அனுமதிக்குமாறு கடிதம் கொடுக்கிறார். அனுமதியிடத்தில் அவளிடம் மருந்துகளுக்கும் படுக்கைக்குமாகக் கட்டணம் கேட்கிறார்கள். அவள் கணவன் இல்லாதவள். அன்பாகப் பராமறிக்க யாரும் அற்றவள். அவளும் அவளது பாட்டியும் ‘பிச்சையெடுத்து வாழ்கிறோம்’ என்கிறாள்.

என்றால், ‘அனாதரவானவருக்கான சான்றிதழை நகராட்சி மண்டபத்தில் சென்று வாங்கி வா’ என்கிறார்கள். அங்கு செல்ல, அங்குள்ள அலவலர் அவளை ‘வேலை வாய்ப்பு அலுவலகத்திற்குச் சென்று, வேலையற்றவள் என ஒரு சான்றிதழ் வாங்கவேண்டும்’ என்கிறார். ‘பிற்பாடு போலீஸ் துறை இது பற்றி விசாரணை மேற்கொள்ளும், அதன் பின்புதான் உனக்கு அனாதரவானவருக்கான சான்றிதழ் தர முடியும்’ என்று சொல்லி விடுகிறார். ‘குழந்தையின் நிலைமையக் கருத்தில் கொண்டு’ உதவுமாறு பெண் மன்றாடுகிறாள். ‘இதுதான் சட்டம்’ எனும் அலுவலர் பெண்ணை வெளியேற்றுமாறு சிப்பந்தியைக் கோருகிறார்.

இப்போது அவளுக்குச் செல்வதற்கு இடமில்லை. எங்கு செல்வதென்றும் தெரியவில்லை. இடம் வலம் தெரியவில்லை. வாகனங்களின் இடையில் சந்தியில் நின்று தனக்குத்தானே புலம்;பிக் கொண்டிருக்கிறாள். குழந்தையின் வியர்த்துச் சோர்ந்த முகம் அவள் முதுகில்; சரிகிறது.

அவளிடம் இரங்கும் பொதுமக்கள் இருக்கிறார்கள். அவளுக்காக இரங்கும் வாலிபனொருவன் அவளைத் தனது வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு வருகிறான். ‘எவ்வளவு காசு கட்ட வேண்டும்?’ என அவன் மருத்துவமனை மேசையில் சத்தமிடுகிறான். அவளுக்காக மருத்துவரைப் பார்க்கக் கேட்டுக்கொண்டு திரைக்கு முன்னால் வருகிறான். குழந்தையின் முகம் திரை முழுக்கத் தெரியும்போது, சலனமற்றுக் குழந்தையின்; உடல் சரிகிறது. தாய் கதறி அழத் துவங்குகிறாள்.

வெளியில் மறுபடி ஒரு பெண்முதுகில் குழந்தையைச் சுமந்தபடி வர, அவளது உருவம் நம்மை நோக்கி திரைக்கு அருகில் வர, முதுகில் குழந்தையுடன் அவளது பிம்பம் திரையில் உறைகிறது.

 

5

‘போரம் சாரட்வண்டி’ திரைப்படம் 1963 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதுவே ஆப்ரிக்க இயக்குனர் ஒருவரால் உருவாக்கப்பட்ட முதல் ஆப்ரிக்கத் திரைப்படமாக வரலாற்றில் நின்று நிலைத்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனரும் மார்க்சியருமான அமரர் செம்பேன் ஒஸ்மான் தான் ஆப்ரிக்க சினிமாவின் தலைமகனாகத் திகழ்கிறார்.

‘அனாதரவானவருனக்கான சான்றிதழ்’ திரைப்படம் 1981 ஆம் ஆண்டு உருவாகியிருக்கிறது. இரண்டு படங்களுக்கும் இடையில் இருபதாண்டு கால இடைவெளி இருக்கிறது. செனிகல் நாட்டில் அதிகார வர்க்கத்தவரின் கொடுமைகள் மற்றும் நகரம் – கிராமம் இடையிலான ஏற்றத்தாழ்வு இன்னும் மாறவில்லை என்பதனை இந்த இரு திரைப்படங்களும் ஒப்பீட்டு ரீதியில் நமக்குக் காண்பித்திருக்கிறது.

மூன்று திரைப்படங்களுமே அரைமணி நேரத்திற்கும் குறைவான படங்கள். மூன்று திரைப்படங்களில் செனிகல் நாட்டின் இரு படங்களும் கச்சிதமான சிறுகதையின் உருவ அமைதி கொண்டவைகளாக உருவாகியிருக்கிறது.

‘போரம் சாரட்வண்டி’ படத்தில் ஒரு குதிரை வண்டிக்காரன் காலையில் நகரத்திற்குச் சென்று, மாலையில் வீடு திரும்புவதற்குள்ளான அவனது அனுபவத்தில், அந்தச் சமூகம் குறித்த ஒரு பிரம்மாண்டமான சித்திரத்தை தீட்டிக் காட்டுகிறது. தெருக்களில் அலையும் போது மனிதர்களுக்கிடையில், அவர்களது பிரச்சினைகளுக்கிடையில் குதிரை வண்டி அலைகிறது. அடுக்குமாடிக் கட்டிடங்களுக்குள்; குதிரைவண்டி வருகிறபோது, ஆகயத்திலிருந்து தெருக்களில் அலையும் நான்கு சக்கர வாகனங்களை, ஆளரவமற்ற, வாகனங்கள் மட்டுமே நகர்கிற தெருக்களை, காமெரா காண்பிக்கிறது. இரு வேறு காட்சிகள். இரு வேறு சித்திரிப்புகள்.

இரண்டாவது படம் தனது குழந்தையை மருத்துவரிடம் காட்டவரும் ஒரு ஏழைத்தாயின் நகர அனுபவங்களை விவரிக்;கிறது. அவளது அலைச்சல்தான் படம் முழுக்கவும் இருக்கிறது. அவளது குழந்தை மரணமுறுகிறபோது அவளது அலைச்சல் நிற்கிறது. பிறிதொரு தாயின் அலைச்சல் நிற்பதில்லை. குழந்தைகளின் மரணமும் தொடர்கிறது. இரண்டு மனிதர்கள், அவர்களது துயரமான ஒரு நாள் அனுபவம், இதுவே இரண்டு குறும்படங்களினதும் மையமாக இருக்கிறது. இவ்வகையில் இப்படங்களிரண்டும் கச்சிதமான குறும்படங்களாக ஆகிறது.

6

‘முறைசாரா உறவு’ படத்தின் கதை இந்தியப் புராணிகத் தன்மை கொண்ட கதை போல இருக்கிறது. மந்திரங்கள், மாயக் கதைகள், ஆணைத் தொடரும் பெண், சடங்குகள் நிறைந்ததாக இருக்கிறது. நிஜமானதொரு மானுடப் பிரச்சினை இருக்கிறது. அதைத் தொடர்ந்த துயரமும் பாசமும் இருக்கிறது. நிர்க்கதியின் அவல நிலைமை இருக்கிறது.

நவீன காலத்தின் ஓழுக்கம் எனும் வரையறையை வைத்து, அந்தத் தாயின் செயல்பாட்டை ஒருவர் வரையறுத்துவிட முடியுமா? அந்தத் தாய் அவ்வகையிலான தேர்வைச் செய்வதற்கு அவள் மேற்கொண்ட வேதனைகள், கேள்விகள் கொண்ட அவளது ஆத்மப் பயணம் எத்தகையது? மானுட அறம் எனும் அளவில் தனது குட்டியைக் காப்பாற்றி தனித்து வாழ விட்டுவிட வேண்டும்; எனும் அவளது அறத்தின் முன்பு, ஒழுக்கம் எனும் நவீன வாழ்வின் கேள்விகள் பெறும் அரத்தம்தான் என்ன?

இதே வகையில் பல்வேறு முறைசாரா உறவுகளை வரலாற்று ரீதியிலும், மானுட இருத்தலின் பிரச்சினைகள் எனும் அளவிலும்;தான் நாம் பார்க்க வேண்டும் என்பதற்கான இந்தியத் தொன்மச் சான்றாக குந்திதேவி இருக்கிறாள். ஐவருக்கும் அழியாத பத்தினியாக திரௌபதை நமக்குமுன் இருக்கிறாள்.

ஓழுக்கம் தொடர்பான வரையறைகள் காலகாலத்துக்கு மாறும். அறம் அவ்வளவு எளிதில் கடந்து போகிற காரியம் இல்லை என்பதைத்தான் இந்தப் படம் நமக்கொரு தரிசனமான முன்வைக்கிறது. இந்தக் குறிப்பிட்ட ஆப்ரிக்கத் திரைப்படம் ஒரு குறும்படத்திற்கான கதையைக் கொண்டதல்ல, மாறாக ஒரு மகா காவியத்திற்கான விரிந்த தளத்தைக் கொண்டது.

Exit mobile version